கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை தனி ரயிலாக இயக்க கோரி நாகர்கோவிலில் அ.தி.மு.க.வினர் போராட்டம்

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை தனி ரயிலாக இயக்க கோரி நாகர்கோவிலில் அ.தி.மு.க.வினர் போராட்டம்

in News / Local

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கும், கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 15-ந் தேதி முதல் பகல் நேரத்தில் கொச்சுவேளிக்கு பயணிகள் ரயிலாக மாற்றி இயக்கப்பட்டு வருகின்றது. கொச்சுவேளிக்கு பயணிகள் ரயிலாக மாற்றப்பட்ட முதல் நாளில் இருந்தே இந்த ரயில் தினமும் மாலை சென்னைக்கு புறப்பட தாமதமாகவே ரயில் நிலையத்திற்கு வருகிறது. 5-வது நாளாக நேற்றும் ஒரு மணி நேரம் தாமதமாகவே நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு வந்தது. அதாவது மாலை 5.40 மணிக்கு வரவேண்டிய இந்த ரயில் 6.40 மணிக்கு வந்தது.

ரயில் தாமதமாக புறப்படுவதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இங்கிருந்து ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் இந்த ரயில் மறு நாள் காலை சென்னை சென்று சேர மேலும் தாமதமாகிறது. இதன் காரணமாக பயணிகள் உரிய நேரத்துக்கு சென்னை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கன்னியாகுமரி எக்ஸ்பிரசை கொச்சுவேளிக்கு இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கன்னியாகுமரி எக்ஸ்பிரசை மீண்டும் தனி ரயிலாக இயக்க வேண்டும் என்றும் பயணிகளும், பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மாலை இதே கோரிக்கையை வலியுறுத்தி குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. ரயில் நிலையத்தில் 1-வது பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கன்னியாகுமரி-கொல்லம் மெமு ரயிலை மறித்து அ.தி.மு.க.வினர் கோஷங்கள் எழுப்பியும், ஒரு சிலர் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இந்த போராட்டம் காரணமாக ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து ரெயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் தனி ரயிலாக இயக்குவது தொடர்பாக திருவனந்தபுரத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும், விரைவில் சுமூகமான முடிவு எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் ரயில் மறியல் போராட்டத்தை கைவிட்டுவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்டிருந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top