தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு வாக்குச்சாவடி ஒதுக்கீடு

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு வாக்குச்சாவடி ஒதுக்கீடு

in News / Local

குமரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு வாக்குச்சாவடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

குமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கும், காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் பேருக்கும் குறைவானவர்களே வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் வாக்குச்சாவடி 1634-ல் இருந்து 2 ஆயிரத்து 234 வாக்குச்சாவடிகளானது.

வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதையடுத்து தேர்தல் பணிக்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

தேர்தலுடன் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெறுவதால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கூடுதல் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இதனால் தேர்தல் பணிக்கு சுமார் 10 ஆயிரத்து 500 ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டது.

இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்களுக்கு நேற்று வாக்குச்சாவடிகளில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு எந்தெந்த வாக்குச்சாவடி என்று ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து அவர்களுக்கான உத்தரவும் வழங்கப்பட்டது.

ஊழியர்கள் தேர்தலுக்கு முந்தைய நாள் (அதாவது இன்று) அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு செல்ல வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. மேலும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்கள் கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள் குறித்த தகவலும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடிக்குள் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களை தவிர மற்றவர்களை அனுமதிக்கக்கூடாது. வேட்பாளர்களின் முகவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடக்கிறது. இரவு 7 மணிக்கு பிறகு வாக்கு பெட்டிகள் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோணம் அரசு என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிக்கு எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top