போலீசார்- ஊர்க்காவல் படையினர் தபால் வாக்குப்பதிவு செய்ய 3 இடங்களில் ஏற்பாடு

போலீசார்- ஊர்க்காவல் படையினர் தபால் வாக்குப்பதிவு செய்ய 3 இடங்களில் ஏற்பாடு

in News / Local

தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார், ஊர்க்காவல் படையினர் குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் தபால் வாக்குப்பதிவு நடைபெற்ற பகுதியை கலெக்டர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தோ்தல் மற்றும் 6 சட்டசபை தொகுதிகளின் பொதுத்தோ்தலை முன்னிட்டு போலீசார், ஊர்காவல் படையினர் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதற்காக மாவட்டத்தில் 3 இடங்களில் வாக்குப்பதிவு மையங்கள் அமைப்பட்டு இருந்தன.

நாகா்கோவில், கார்மல் மேல் நிலைப்பள்ளியில் நேற்று போலீசார், ஊர்க்காவல் படையினா் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கான தபால் வாக்குப்பதிவு நடைபெறுவதை மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அரவிந்த், நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள 4 ஆயிரம் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினா் மற்றும் 1000 முன்னாள் படைவீரர்கள் என மொத்தம் 5 ஆயிரம் பேர் தோ்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் தபால் வாக்குப்பதிவு செய்வதற்காக  கன்னியாகுமரி மற்றும் நாகா்கோவில் சட்டசபை தொகுதிக்கு உட்பட்டவா்களுக்கு நாகா்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியிலும், விளவங்கோடு மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டவா்களுக்கு மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியிலும், குளச்சல் மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டவர்களுக்கு கருங்கல் பெத்தலகேம் மெட்ரிக் பள்ளியிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவர்களில் படிவம் 12 சமர்ப்பித்தவர்களுக்கு மட்டும் இன்று (நேற்று) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இவ்வாறு மாவட்ட தோ்தல் அதிகாரியும், கலெக்டருமான அரவிந்த் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காவலர்கள், ஊர்க்காவல் படையினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள், நாகா்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு செய்வதை கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top