குமரியில் 10 இடங்களில் பறவைகள் சரணாலயம்..! அமைக்க திட்டம் தலைமை வனபாதுகாவலர் தகவல்..!

குமரியில் 10 இடங்களில் பறவைகள் சரணாலயம்..! அமைக்க திட்டம் தலைமை வனபாதுகாவலர் தகவல்..!

in News / Local

குமரி மாவட்டத்தில் கொட்டாரம் உள்பட 10 இடங்களில் பறவைகள் சரணாலயம் அமைக்க திட்டமிட்டுள்ளோம் என நெல்லை மண்டல தலைமை வனபாதுகாவலர் தின்கர்குமார் கூறினார்.

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் அச்சன்குளம் பகுதியில் உள்ள குளத்தில் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் அங்கு ரூ.13½ லட்சம் செலவில் பறவைகள் சரணாலயம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

மேலும், சுற்றுலா பயணிகள் அமர்ந்து பறவைகளை பார்த்து ரசிக்க இருக்கை வசதிகள், ஓய்வு கூடம், குளத்தை சுற்றிலும் தடுப்பு சுவர் அமைத்து நடைபாதைகள் அமைக்கப்படுகிறது. குளத்தின் நடுவில் தீவுகளும் அமைக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் கொட்டாரம் அச்சன்குளம் பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதை நெல்லை மண்டல தலைமை வன பாதுகாவலர் தின்கர் குமார் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, குளத்துக்கு எந்தெந்த மாதங்களில் வெளிநாட்டு பறவைகள் வருகின்றன, எவ்வளவு பறவைகள் வந்து செல்கின்றன என்பன போன்ற விவரங்களை அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், இங்கு பறவைகள் சரணாலயம் அமைக்கும் பணிகள் எந்த அளவுக்கு நடந்து முடிந்துள்ளது என்பது பற்றியும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதே சமயத்தில், பணிகளை விரைவாக முடிக்கும்படி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது குமரி மாவட்ட வன அதிகாரி அசோக்குமார், பூதப்பாண்டி வனச்சரக வனவர் பிரசன்னா, வனக்காப்பாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நெல்லை மண்டல தலைமை வன பாதுகாவலர் தின்கர்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு மட்டும் 130 வெளிநாட்டு பறவைகள் குமரி மாவட்டத்துக்கு படையெடுத்து வந்து உள்ளன. குறிப்பாக கொட்டாரம் அச்சன்குளம் பகுதியில் உள்ள குளத்திற்கு அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களும் வெளிநாட்டு பறவைகள் அதிகமாக வருகின்றன.

சீப்புகொண்டை வாத்து என்ற பறவை தான் அதிகமாக வருகிறது. இதனால் கொட்டாரம் அச்சன்குளம் பகுதியில் உள்ள குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மேலும், குமரி மாவட்டத்தில் சுசீந்திரம், தேரூர், பறக்கை, பால்குளம், கொட்டாரம் அச்சன்குளம், கோதண்டராமர் குளம், தத்தையார்குளம், மாணிக்க புத்தேரிகுளம், நரிக்குளம், பாறைக்காத்தான் குளம் ஆகிய 10 இடங்களை பறவைகள் சரணாலயமாக அமைக்க திட்டமிட்டு உள்ளோம். இந்த பணிகள் ஒவ்வொரு குளங்களிலும் படிப்படியாக மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top