ஜாமீனில் வெளியே வந்த நிலையில், மீண்டும் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட பெண் இடைத்தரகர்கள்  கைது!

ஜாமீனில் வெளியே வந்த நிலையில், மீண்டும் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட பெண் இடைத்தரகர்கள் கைது!

in News / Local

ஜாமீனில் வெளியே வந்த நிலையில், மீண்டும் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட பெண் இடைத்தரகர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், டிரைவர் நந்தகுமார் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில், இதுவரை 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த கும்பல் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.

இதற்கிடையில், இவ்வழக்கில் தொடர்புடைய ஈரோட்டை சேர்ந்த இடைத்தரகர்கள் ஹசீனா, கல்யாணி ஆகியோர் ஜாமினில் வெளிவந்துள்ளனர். இந்த நிலையில், அவர்கள் மீண்டும் குழந்தை விற்பனையில் ஈடுபட முயன்ற விவகாரத்தில் சிக்கியுள்ளனர். கோவை மதுக்கரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜாகீர், தனக்கு தெரிந்தவர்களுக்கு குழந்தை தேவை எனக் குழந்தை விற்பனை செய்யும் கும்பலான ஹசீனா, அவரது தோழி கல்யாணி ஆகியோரைத் தொடர்பு கொண்டுள்ளார்.

அவர்கள் குழந்தைக்கான பணத்தையும் பேசியுள்ளனர். இதனையடுத்து, மதுரையைச் சேர்ந்த கண்ணன்-ஜோதி என்ற தம்பதியினரை ஆண் குழந்தையுடன் கோவை கருமத்தம்பட்டி அழைத்து வந்த ஹசீனா, கல்யாணி அந்தக் குழந்தையை ஜாகீரிடம் காட்டியுள்ளனர். பின்னர், சூலூரில் வைத்து குழந்தையைத் தருவதாகக் கூறி, அங்கு அனைவரும் ஒன்று கூடிய நிலையில், ஆட்டோ ஓட்டுநர் ஜாகீரிடம் புரோக்கர்கள் ஹசீனா, கல்யாணி ஆகியோர் கூடுதல் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், மூன்று பேரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, சாலையில் சண்டையிட்டுக் கொண்டனர். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மூன்று பேரையும் சூலூர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை, ஆண் குழந்தையுடன் இருந்த கண்ணன்-ஜோதி தம்பதியினரையும் பிடித்தனர். பின்னர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட சூலூர் போலீசார், 5 பேரையும் கருமத்தம்பட்டி காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

தற்போது கருமத்தம்பட்டி காவல் துறை வழக்குப்பதிவு செய்து 5 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் குழந்தையை விற்க வந்த மதுரையைச் சேர்ந்த கண்ணன்-ஜோதி தம்பதியினர் ஏற்கெனவே தங்களது முதல் குழந்தையை, இதேபோன்று விற்பனை செய்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த ஆண்குழந்தை யாருக்காக வாங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top