தேர்தல் பிரசாரதிற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை குமரி வருகை!

தேர்தல் பிரசாரதிற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை குமரி வருகை!

in News / Local

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் குமரி மாவட்டத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு வேட்பாளர்களும் தினமும் வீதி வீதியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (புதன்கிழமை) மாலை குமரி மாவட்டத்துக்கு வருகிறார். இவர் 3 இடங்களில் மக்களை சந்தித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரசாரம் செய்கிறார்.

அதாவது கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் தோவாளை சந்திப்பிலும், நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் வடசேரி சந்திப்பிலும், குளச்சல் சட்டசபை தொகுதியில் திங்கள்சந்தையிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்த வாகனத்தில் நின்றவாறு தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதனையடுத்து பிரசாரத்தை முடித்துவிட்டு இரவில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

மேலும் குமரி மாவட்டம் வரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அ.தி.மு.க.வினர் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பங்கேற்று பேசினார். அப்போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க தொண்டர்கள் திரண்டு வர வேண்டும் என்றும், சிறப்பான முறையில் வரவேற்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், நகர செயலாளர் ஜெயசந்திரன், அணி செயலாளர் ஜெயசீலன், விக்ரமன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top