களியக்காவிளையில் கொரோனா பரிசோதனை மையத்தில் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு!

களியக்காவிளையில் கொரோனா பரிசோதனை மையத்தில் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு!

in News / Local

வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து குமரிக்கு வருபவர்களை தடுத்து நிறுத்தி கொரோனா பரிசோதனை செய்ய களியக்காவிளை, ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் 3 அடுக்கு கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.

இந்த பணியில் போலீசார், வருவாய்த்துறையினர், சுகாதார பணியாளர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டுள்ளனர். களியக்காவிளை சோதனைச்சாவடியில் ஈடுபட்ட சுகாதார பணியாளர்கள் 3 பேருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. சோதனைச்சாவடியில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் தான் இந்த தொற்று பணியாளர்களுக்கு பரவியது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து முதற்கட்டமாக ஆரல்வாய்மொழியில் உள்ள சோதனைச்சாவடியில் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. கூண்டு வடிவில் அமைக்கப்பட்ட இந்த சோதனைச்சாவடியில் ஆவணங்களை சரிபார்க்க கவுண்ட்டர் வசதி மற்றும் சமூக இடைவெளி இருக்கும் வகையில் வசதிகள் உள்ளன.

இந்தநிலையில் நேற்று களியக்காவிளை சோதனைச்சாவடிக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, அங்கு பாதுகாப்பு வசதிகளுடன் கூண்டு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும், புதிதாக பாதுகாப்பு கூண்டு அமைக்கப்படவுள்ள இடம், வாகனங்கள் மற்றும் பயணிகளின் ஆவணங்கள் சரிபார்க்கும் இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து, மேல்புறம் ஒன்றியத்திற்குட்பட்ட களியக்காவிளை தேர்வுநிலை பேரூராட்சியில், தமிழ்நாடு 14-வது நிதி குழுமானியத் திட்டத்தில் (2019-2020), ரூ.50 லட்சம் செலவில், ஒற்றைப்பனவிளை முதல் கரியாராவிளை சாலைவரை புதிதாக சிமெண்ட் தளம் அமைத்து அலங்காரகற்கள் பதிக்கப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும், திங்கள்நகரில் ரூ.5.50 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு வரும் காமராஜர் பஸ் நிலையத்தையும் அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வில், உதவி கலெக்டர் (பயிற்சி) ரிஷாப், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) கண்ணன், உதவி செயற்பொறியாளர்கள் சனல்குமார், விஸ்வநாதன், செயல் அலுவலர்கள் ஏசுபாலன் (களியக்காவிளை), பாபு சந்திரசேகரன் (திங்கள்நகர்), அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top