காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வேட்புமனு தாக்கல்

காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வேட்புமனு தாக்கல்

in News / Local

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர், தி.மு.க. கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும் என நிருபர்களிடம் கூறினார்.

தமிழக சட்டசபை பொதுத்தேர்தலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலும் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதாவும், காங்கிரசும் நேரடியாக மோதுகின்றன. கடந்த 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார். 

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மறைந்த வசந்தகுமார் எம்.பி.யின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுகிறார். அவர் நாகர்கோவில் டெரிக் சந்திப்பு இந்திரா காந்தி சிலை முன்பிருந்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பேரணியாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்பதால் விஜய் வசந்துடன், நாகர்கோவில் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் சுரேஷ்ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுக்குழு உறுப்பினர் அந்தோணி ஆகியோர் மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மற்ற நிர்வாகிகளை கலெக்டர் அலுவலகத்துக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை. அவர்கள் கலெக்டர் அலுவலகம் வெளியே காத்திருந்தனர்.

விஜய் வசந்த் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அரவிந்திடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் நாகர்கோவில் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் சுரேஷ்ராஜன் இருந்தார்.

வேட்புமனு தாக்கல் செய்து முடித்ததும் விஜய் வசந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறுகையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகிறேன். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்து புதிய ஆட்சி அமைப்போம். 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைப்பார். குமரி மாவட்டத்தில் மக்களை பாதிக்காத வகையில் திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றார்.

வேட்புமனு தாக்கலையொட்டி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அனைத்து மக்களை போலீசார் சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர்.

 

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top