கன்னியாகுமரி தொகுதியை, 28 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றியது காங்கிரஸ்!

கன்னியாகுமரி தொகுதியை, 28 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றியது காங்கிரஸ்!

in News / Local

தொகுதி மறுசீரமைப்பினால் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதி கடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியாக உருவானது. இந்த தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மார்ஷல் நேசமணி, பெருந்தலைவர் காமராஜர், குமரி அனந்தன் போன்ற முக்கிய தலைவர்கள் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த தொகுதி காங்கிரஸின் கோட்டையாக திகழ்ந்து வந்தது.

கடந்த 1991-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் இந்த தொகுதியில் டென்னிஸ் போட்டியிட்டு வென்றார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியால் இந்த தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை. இடையில் கூட்டணி கட்சியினரும், மற்ற கட்சியினரும் வெற்றி பெற்றனர். 1999-ம் ஆண்டு இங்கு முதன்முறையாக பா.ஜனதா வெற்றி பெற்றது. அதாவது அந்த கட்சியின் சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய மந்திரியானார்.

2004-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெல்லார்மினும், 2009-ம் ஆண்டு தி.மு.க.வின் ஹெலன் டேவிட்சனும் வெற்றி பெற்றனர். கடந்த தேர்தலில் பா.ஜ.க வை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் வெற்றி பெற்றார் . அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட எச்.வசந்தகுமார் தோல்வியை தழுவினார்.

இந்த நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எச்.வசந்தகுமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணனை விட 2½ லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார். இதன் மூலம் கன்னியாகுமரி தொகுதியை 28 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றி காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி முகம் தெரிந்தவுடன் குமரி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்த தொண்டர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top