குமரியில் தொடரும் பன்றிக்காய்ச்சல் மரணங்கள்

குமரியில் தொடரும் பன்றிக்காய்ச்சல் மரணங்கள்

in News / Local

கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 7 ஆக உயர்ந்துள்ள சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. குமரிமாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. பன்றிக்காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறை அதிகாரிகளும் கடும் நடவடிக்கை எடுத்தனர். நோய் பாதித்த பகுதிகளில் தடுப்பு மாத்திரைகளும் வினியோகிக்கப்பட்டது. இந்தநிலையில் நாகர்கோவிலைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை தெரசா மற்றும் கர்ப்பிணி பெண் என 6 பேர் பலியானார்கள்.

இது மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. பன்றிக்காய்ச்சல் நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. அங்கு நோய் அறிகுறி உள்ளவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பலர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தற்போது ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பன்றிக்காய்ச்சல் வார்டில் 14 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 2 பேர் ஆண்கள், 9 பெண்கள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் நாகர்கோவில், ராணித்தோட்டம், தடி டெப்போ பகுதியை சேர்ந்த கமலம் என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பன்றிக்காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நோய் முற்றிய நிலையில் சிகிச்சை பலனின்றி கமலம் பரிதாபமாக இறந்தார். இவரையும் சேர்த்து குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து சுகாதாரத்துறை நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. மாவட்டத்தின் அனைத்து நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் சுகாதார பணியாளர்கள் நோய் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நோய் அறிகுறி உள்ளவர்களை உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெறவும் அறிவுரை வழங்கி வருகிறார்கள். இது தவிர துப்புரவு பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top