குமரி மாவட்டத்தில் மழை: பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

குமரி மாவட்டத்தில் மழை: பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

in News / Local

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதையொட்டி குமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கியார் புயலாக மாறியுள்ளதால் குமரி மாவட்டத்தில் 3 நாட்கள் கன மழை பெய்யும் என்றும் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

ஆனால் எதிர்பார்த்த அளவு குமரி மாவட்டத்தில் மழை பெய்யவில்லை. நேற்று காலையில் நாகர்கோவிலில் சாரல் மழை பெய்தது. பின்னர் வெயிலும், மேகமூட்டமுமாக மாறி, மாறி சீதோஷ்ண நிலை இருந்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டப் பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:–

பேச்சிப்பாறை– 11.2, பெருஞ்சாணி– 12.2, சிற்றார் 1– 10, சிற்றார் 2– 19, புத்தன் அணை– 11.6, மாம்பழத்துறையாறு– 5, பொய்கை–5, முக்கடல்– 4.2, பூதப்பாண்டி– 8.6, கன்னிமார்– 9.2, கொட்டாரம்– 27, மயிலாடி– 15.8, நாகர்கோவில்– 3.2, சுருளக்கோடு– 8.2, குளச்சல்– 6.4, ஆரல்வாய்மொழி– 5, கோழிப்போர்விளை– 7, அடையாமடை– 8, குருந்தங்கோடு– 3, முள்ளங்கினாவிளை– 5 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. இதில் அதிகபட்சமாக கொட்டாரம் பகுதியில் 27 மி.மீ. மழை பெய்தது.

இந்த மழையின் காரணமாக சிற்றார்–2 அணையைத் தவிர அனைத்து அணைகளுக்கும் தண்ணீர் வரத்து உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 244 கன அடி தண்ணீர் வந்தது. அது நேற்று 417 கன அடியாக அதிகரித்துள்ளது. பெருஞ்சாணி அணைக்கு 266 கன அடி தண்ணீரும், பொய்கை அணைக்கு 18 கன அடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு 18 கன அடி தண்ணீரும், முக்கடல் அணைக்கு 2 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது. பெருஞ்சாணி அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை 1700 கன அடி உபரிநீர் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. மழை குறைந்ததின் காரணமாக நேற்று காலை 8 மணி முதல் உபரிநீர் திறப்பு அளவு 300 கன அடியாக குறைக்கப்பட்டது. மேலும் பெருஞ்சாணி அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதேபோல் மாம்பழத்துறையாறு மற்றும் முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால், இந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top