குமரியில் இன்று இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

குமரியில் இன்று இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

in News / Local

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே செல்கிறது. வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்துக்கு திரும்பியவர்களால் தொற்று அதிகரிக்கிறது.

இதுவரை பொதுமக்களை தாக்கி வந்த கொரோனா, தற்போது தடுப்பு பணியில் ஈடுபடும் முன்கள வீரர்களையும் தாக்குகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சுகாதார பணியாளர்கள் 3 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர், கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதால் அவர் நேற்று முன்தினம் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள நகர்நல சுகாதார மையத்தில் கொரோனா பரிசோதனைக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

அங்கு சுகாதார பணியாளர்கள், இன்ஸ்பெக்டரிடம் சளி மாதிரிகளை சேகரித்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவு நேற்று வந்தது. இதில் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

உடனே அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் முதன் முதலாக போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது போலீசார் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

தொற்று கண்டறியப்பட்ட இன்ஸ்பெக்டர் போலீஸ் நிலையத்திலும் தினமும் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதனால் அவருடைய ஜீப் டிரைவர், போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசார் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இன்ஸ்பெக்டருக்கு தொற்று இருக்கும் தகவல் தெரிய வந்ததும் அவர் பணியாற்றிய மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பிளச்சிங் பவுடர் தூவுதல் மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்தன.

மேலும் அவருடன் பணியாற்றிய போலீசார், குடும்பத்தினர், உறவினர்கள், போலீசாருடன் பழகியவர்கள், சந்தித்துச் சென்றவர்கள் பட்டியலை சுகாதாரத்துறையினரும், போலீசாரும் சேகரித்து வருகிறார்கள். இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

அதே சமயத்தில் கொ ரோனா தொற்று பாதிக்கப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்ற இடங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அந்த இன்ஸ்பெக்டர் நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கும் சென்றதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து நேற்று கோட்டார் போலீஸ் நிலையம் மற்றும் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இதேபோல் குமரியில் மேலும் 6 பேருக்கு நேற்று தொற்று ஏற்பட்டது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த முளகுமூடு அருகில் உள்ள வெள்ளிக்கோடு பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண்ணுக்கு ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியிலும், அண்டுகோடு அருகில் உள்ள அந்திவிளையைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கும், அவருடைய 36 வயது மகனுக்கும் களியக்காவிளை சோதனைச் சாவடியிலும் கொரோனா பரிசோதனைக்கான சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டன.

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 59 வயது ஆண், 52 வயது ஆண் ஆகியோருக்கு அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், கொட்டாரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு சுகாதாரத்துறையினரும் கொரோனா பரிசோதனைக்கான சளி மாதிரிகளை சேகரித்து அனுப்பி வைத்தனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வந்தன. இதில் இவர்கள் 6 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. ஆஸ்பத்திரியில் நேற்று 64 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். எனவே 63 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

குமரியில் நேற்றுமுன்தினம் 6 பேருக்கு தொற்று ஏற்பட்டது. அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

நாகர்கோவில் மறவன்குடியிருப்பு தெற்கு தெருவைச் சேர்ந்த 25 வயது வாலிபர் சென்னையில் இருந்து வந்திருந்தார். பத்துகாணி பகுதியைச் சேர்ந்த வாலிபர், பத்துகாணி ஆரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் சுகாதார பணியாளரின் பேரன் ஆவார். இதனால் சுகாதார பணியாளர் மூலமாக பேரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் சுகாதார பணியாளருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாகர்கோவில் வடசேரி ஆம்னி பஸ் நிலையம் அருகில் உள்ள பகுதியைச் சேர்ந்த 26 வயது வாலிபர், செங்கல்பட்டில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் நாகர்கோவில் திரும்பியுள்ளார். இவருக்கு அந்த பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் தொற்று ஏற்பட்ட விளாத்திவிளையைச் சேர்ந்த 30 வயது வாலிபர் சவுதியில் இருந்து குமரிக்கு வந்துள்ளார். நாகர்கோவில் அறுகுவிளையைச் சேர்ந்த 47 வயது பெண்ணும், அவருடைய 20 வயது மகனும் மும்பையில் இருந்து நாகர்கோவில் வந்துள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top