நாகர்கோவில் ஊழியருக்கு கொரோனா பாதிப்பு தலைமை தபால் நிலையம் மூடப்பட்டது

நாகர்கோவில் ஊழியருக்கு கொரோனா பாதிப்பு தலைமை தபால் நிலையம் மூடப்பட்டது

in News / Local

நாகர்கோவிலில் உள்ள குமரி மண்டல தபால்துறை முதுநிலை மண்டல மேலாளராக பணியாற்றி வந்தவர் சந்திரசேகரன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னைக்கு மாற்றப்பட்டார். சென்னையில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலில் இருந்து வருவதால், அதிகாரி தபால்துறை ஜீப்பிலேயே சென்னை புறப்பட்டுச் சென்றார்.

வழக்கமான டிரைவர் விடுப்பில் இருந்ததால் தக்கலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றும் ஒருவர் அந்த ஜீப்பை ஓட்டிச் சென்றுள்ளார். அதிகாரியை சென்னையில் விட்டு, விட்டு மீண்டும் அவர் அதே ஜீப்பில் நாகர்கோவிலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வந்தார். அவருக்கு ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் அவர் ஜீப்பை நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் நிறுத்திவிட்டு, நாகர்கோவில் தேவசகாயம் தெருவில் உள்ள தபால்துறை ஊழியர்கள் குடியிருப்பில் உள்ள வீட்டுக்குச் சென்று விட்டார். நேற்று முன்தினம் அவரது பரிசோதனை முடிவு வந்தது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரையும், அவருடன் வீட்டில் இருந்த மனைவியையும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் கொரோனா சிகிச்சை வார்டிலும், மனைவி தனிமைப்படுத்தும் வார்டிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தபால்துறை ஊழியரின் மனைவியும் தபால்துறை ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நேற்று பிற்பகலில் நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையத்திலும், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஜீப்பிலும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பகவதிப்பெருமாள் தலைமையிலான ஊழியர்கள் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. தலைமை தபால் நிலையம் நேற்று பிற்பகலுக்குப் பிறகு மூடப்பட்டது. மேலும் தேவசகாயம் தெருவில் உள்ள தபால்துறை ஊழியர்கள் குடியிருப்பில் உள்ள அவருடைய வீட்டுக்கும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு, நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அந்த வீடும் பூட்டப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றும் வடசேரியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் வள்ளியூர் பகுதிக்கு சென்று வந்துள்ளார். அவருக்கும் ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் நேற்று முன்தினம் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனைக்குப்பிறகு வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவர் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக நாகர்கோவில் நாகராஜா கோவில் தெற்கு ரதவீதியில் உள்ள மருந்து ஏஜென்சி நிறுவனம், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அலுவலக சந்திப்பு பகுதியில் உள்ள மருந்துக்கடை, வடசேரியில் உள்ள ஓட்டல் ஆகியவற்றுக்கும் சென்றுள்ளார். மருந்து ஏஜென்சி நிறுவனம், மருந்துக்கடை, ஓட்டல் ஆகியவற்றில் கிருமி நாசினி மருந்து தெளித்து மூடப்பட்டன. மேலும் மருந்து ஏஜென்சி நிறுவன ஊழியர், மருந்துக்கடை ஊழியர், ஓட்டல் ஊழியர் ஆகியோர் பற்றிய விவரங்களை நாகர்கோவில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் சேகரித்துள்ளனர். அவர்களுக்கு 4 நாட்கள் கழித்து பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

 

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top