காங்கிரஸ் பெண் வேட்பாளர் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக கூறி, பறக்கும் படையினர் சோதனை நடத்தியதால் பரபரப்பு!

காங்கிரஸ் பெண் வேட்பாளர் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக கூறி, பறக்கும் படையினர் சோதனை நடத்தியதால் பரபரப்பு!

in News / Local

குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே கொல்லஞ்சி கிணற்றுவிளை பகுதியை சேர்ந்தவர் சோபிதாஸ், முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சலோமி, காங்கிரஸ் பிரமுகர். இவர் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் கொல்லஞ்சி கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். தேர்தலில் இவருடன் மேலும் 4 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று சலோமியும், அவரது கணவரும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில், சலோமியின் வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து நேற்று மாலை 3.30 மணியளவில் மாவட்ட தேர்தல் பறக்கும்படை அதிகாரி விஷ்ணுராஜ் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் சலோமி வீட்டுக்கு சென்றனர். மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைைமயில் ஏராளமான போலீசார் வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சலோமி வீட்டுக்கு விரைந்து சென்றார். அவரிடம், வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்ததாகவும், எனவே சோதனையிட ஒத்துழைக்குமாறு அதிகாரிகள் கூறினர். இதையடுத்து போலீசார் துணையுடன் அதிகாரிகள் வீட்டின் ஒவ்வொரு அறையாக சோதனையிட்டனர். ஆனால், அங்கு மது பாட்டில்கள் எதுவும் சிக்கவில்லை.

இதற்கிடையே ஒரு பெரிய அறை மட்டும் பூட்டப்பட்டிருந்தது. அதை திறக்கும்படி அதிகாரிகள் கூறிய போது, அதன் சாவி கணவரிடம் இருப்பதாகவும், வீட்டில் மது பாட்டில்கள் எதுவும் இல்லை என சலோமி கூறினார். ஆனால், பறக்கும்படையினர் அதை ஏற்க மறுத்தனர்.

இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர். சலோமி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதால் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டில் சோதனையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் பூட்டப்பட்டிருக்கும் அறையை சோதனையிடுவதில் உறுதியாக இருந்தனர்.

இதற்கிடையே வேட்பாளர் சலோமியின் கணவர் சோபிதாஸ் அங்கு வந்தார். அவர் பூட்டி கிடந்த அறையை திறந்து காட்டினார். தொடர்ந்து பறக்கும்படையினர் அந்த அறையை சோதனையிட்டனர். ஆனால், அங்கும் மது பாட்டில்கள் எதுவும் சிக்கவில்லை. சுமார் ½ மணி நேரம் சோதனைக்கு பிறகு பறக்கும் படையினர் வீட்டை விட்டு வெளியேறினர்.

உடனே, பறக்கும்படை அதிகாரிகளை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அதிகாரிகளிடம் சோதனையில் மது பாட்டில்கள் கிடைத்ததா? இல்லையா? என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். அப்போது, மது பாட்டில்கள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். உடனே, அங்கு கூடிநின்ற பொதுமக்கள் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

பின்னர் போலீசார் கூட்டத்தினரை அமைதிப்படுத்தி பறக்கும்படையினரை பாதுகாப்பாக வாகனத்தில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top