நாகர்கோவில் நீதிமன்ற உத்தரவால் போலீஸ் பிடியில் தவித்த தந்தை - மகன் மீட்பு!

நாகர்கோவில் நீதிமன்ற உத்தரவால் போலீஸ் பிடியில் தவித்த தந்தை - மகன் மீட்பு!

in News / Local

நாகர்கோவில் அருகே தேங்காய் வெட்டும் தொழிலாளி மற்றும் அவரது மகன் காவல்துறை பிடியில் இருந்து மீட்கப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள செம்பொன்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜா (51). தேங்காய் வெட்டும் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். கடந்த 3ம்தேதி, ராஜாவை, குடும்பத்துடன் விசாரணை என்ற பெயரில் தனிப்படை போலீசார் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் ராஜாவையும், அவரது 17 வயது மகனான 11 ம் வகுப்பு மாணவன் அஜேயை கஸ்டடியில் வைத்து விட்டு மற்ற அனைவரையும் விடுவித்துள்ளனர்.

இதற்கிடையே ராஜா மற்றும் அவரது மகன் கதி என்ன? என்பது தெரியாமல் இருந்து வந்தது . இது தொடர்பாக நாகர்கோவில் ஜே.எம். 3வது நீதிமன்றத்தில், ராஜாவின் உறவினர்கள் சார்பில் மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் விசாரணை என்ற பெயரில் ராஜாவையும், அவரது மகனையும் சட்ட விரோதமாக காவல்துறையினர் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாகவும், எனவே அவர்களை மீட்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.மனுவை விசாரித்த நீதிபதி கிறிஸ்டின், வழக்கறிஞர் சதீஷ் என்பவரை கொண்ட ஒரு நபர் கமிஷனை அமைத்து ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டார்.

இதன்படி சதீஷ் நேரடியாக இதில் விசாரித்து, சுசீந்திரம் காவல் நிலையத்தில் இருந்த ராஜா மற்றும் அவரது 17 வயது மகன் அஜே ஆகிய இருவரையும் மீட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அவர்களிடம் விசாரித்த நீதிபதி, இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மேலும் அவர்களை போலீசார் எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என்றும் கூறி உள்ளார். இதையடுத்து ராஜா மற்றும் அவரது மகன் அஜே ஆகிய இருவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top