குமரியில் வெள்ள அபாய எச்சரிக்கை

குமரியில் வெள்ள அபாய எச்சரிக்கை

in News / Local

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இரவு விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. நாகர்கோவிலில் நேற்று இரவு முதலே விட்டு, விட்டு மழை பெய்தது. இன்று காலையிலும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பள்ளி சென்ற மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். மயிலாடி, கொட்டாரம், குளச்சல், ஆனைக்கிடங்கு, ஆரல்வாய்மொழி, சுருளோடு, பூதப்பாண்டி, முள்ளங்கினாவிளை, புத்தன் அணை உள்பட அதன் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு, குளு சீசன் நிலவுகிறது.

கோழிப்போர்விளை பகுதியில் சுமார் 2 மணி நேரமாக கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. அங்கு அதிகபட்சமாக 70 மி.மீ. மழை பதிவானது.திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் கொட்டித்தீர்த்த கனமழையினால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் அணைகளின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.95 அடியாக இருந்தது. அணைக்கு 431 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக் கிறது. அணையில் இருந்து 245 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 27.40 அடியாக இருந்தது. அணைக்கு 696 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 245 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சாணி அணை மீண்டும் நிரம்பி வருவதை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top