அழிக்கால் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் ராட்சத அலைகள் ஊருக்குள் புகுந்தன. அப்போது கடல் நீரை தடுக்க வாசலில் மணல் மூடைகளை அடுக்கி கொண்டிருந்த வாலிபர் மீது வீடு இடிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார்.
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால் பகுதியில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கடல் சீற்றம் ஏற்படுவது வழக்கம். இந்த காலக்கட்டத்தில் கடலில் ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்து மிகுந்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
கடல்நீர் வீடுகளுக்குள் புகுவதை தடுக்க மக்கள் வாசலில் மணல் மூடைகளை அடுக்கி வைப்பார்கள். அதையும் மீறி ஆண்டுதோறும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, தங்கள் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்தநிலையில், நேற்று அழிக்கால் பகுதியில் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து அழிக்கால் மேற்கு தெரு பகுதியில் புகுந்து 50 -க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது. தாழ்வான பகுதியில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் அடைக்கலம் புகுந்தனர்.
மேற்குதெருவை சேர்ந்த மீனவர் மரியதாஸ் மகன் பிரதீப் அஸ்வின் (வயது 27) தனது வீட்டின் உள்ளே கடல் நீர் புகுவதை தடுக்க வாசலில் மணல் மூடைகளை அடுக்கி வைத்து கொண்டு இருந்தார். அவருடன் பக்கத்து வீட்டை சேர்ந்த லிபின் (14), விதுல் (16) ஆகியோரும் உடனிருந்து உதவி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு ராட்சத அலை எழுந்து கரையை கடந்து ஊருக்குள் புகுந்து பிரதீப் அஸ்வின் வீட்டின் மீது பயங்கரமாக மோதியது. இதில் வீட்டின் சுவர் இடிந்து வாசலில் மணல் மூடைகளை அடுக்கிக் கொண்டிருந்த 3 பேர் மீதும் விழுந்தது. அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி மணல் குவியலுக்குள் புதைந்தனர்.
இதை பார்த்ததும் அருகில் நின்றவர்கள் விரைந்து வந்து 3 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், பிரதீப் அஸ்வின் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த லிபின், விதுல் ஆகியோர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அந்தபகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
0 Comments