குமரி ஆசிரியையின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரோசாரியா (வயது 29). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இதே பள்ளியில் குமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த 23 வயது ஆசிரியை வேலை பார்த்து வருகிறார். இதற்காக அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கி இருந்து பணிக்கு சென்று வந்தார்.
அப்போது, ரோசாரியாவுக்கும், அந்த ஆசிரியைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால், ஆசிரியை மார்ச் மாதம் சொந்த ஊரான குமரிக்கு திரும்பினார். அதன் பிறகு அவர், ரோசாரியாவை தொடர்பு கொள்ளவில்லை. ரோசாரியாவின் நடத்தை சரியில்லாததால் ஆசிரியை அவரை விட்டு விலகியதாக தெரிகிறது. இதற்கிடையே ரோசாரியா, ஆசிரியையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது.
மேலும், உனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் பதிவிடுவேன் என அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் புகாரை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை சென்று ரோசாரியாவை பூதப்பாண்டிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஆசிரியையை தொடர்ந்து மிரட்டியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அதிரடியாக அவரை கைது செய்தனர்.
ஆசிரியையின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய ஆசிரியரை போலீசார் கைது செய்த சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments