2021யில் பா.ஜனதா அ.தி.மு.க. கூட்டணி முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி : பொன்.ராதாகிருஷ்ணன்

2021யில் பா.ஜனதா அ.தி.மு.க. கூட்டணி முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி : பொன்.ராதாகிருஷ்ணன்

in News / Local

நாகர்கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு சிறந்த முறையில் கையாளுகிறது. இதனால் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. மத்திய அரசின் நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றினால், அதிக பாதிப்புள்ள சில மாநிலங்களிலும் தொற்று பாதிப்பு குறையும். குமரி மாவட்டத்தில் அனைத்து மதத்தினரும் ஒன்று சேர்ந்து சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைகளை கொண்டாடுவார்கள். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இதுபோன்று ஒருங்கிணைந்த நிகழ்ச்சி இருக்காது.

குமரி மாவட்டத்தில் இருந்து நவராத்திரி விழாவுக்காக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படும் சாமி சிலைகள் பாரம்பரிய முறைப்படி தான் கொண்டு செல்ல வேண்டும். இதனை மாற்றி அமைக்க யாருக்கும் உரிமை இல்லை. மேலும் இதை ஊர்வலமாக கருதக்கூடாது. எனவே கேரள அரசும், தமிழக அரசும் இணைந்து ஆலோசனை நடத்தி கொரோனா விதிகளின்படி பாரம்பரிய முறையில் சாமி சிலைகளை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் தான் பா.ஜனதா உள்ளது. 2021-ம் ஆண்டு ஆட்சியில் பா.ஜனதா அங்கம் வகிக்கும். எங்கள் கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான். இதில் நான் கூறிய கருத்துகளை திரித்து வெளியிட்டு விட்டனர். நான் சொந்த தொகுதியில்(கன்னியாகுமரி) செல்வாக்கு இழந்து விட்டதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருக்கிறார். யார்-யாருக்கு எங்கெங்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை யாரும் முடிவு செய்ய முடியாது.

14-ந் தேதி நாகர்கோவிலில் நடக்க இருக்கும் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச உள்ளேன். வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு இப்போது இருப்பதில் 3-ல் ஒரு பங்கு இடம் தான் கிடைக்கும். மத்திய அரசு, காங்கிரஸ் ஆட்சியில் நடந்த தவறுகளை சரி செய்து கொண்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநில பொதுச் செயலாளர் உமாரதி ராஜன், மாவட்ட பொருளாளர் முத்துராமன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top