குமரியில் ஒரே நாளில் 17 பேர் வேட்புமனு தாக்கல்

குமரியில் ஒரே நாளில் 17 பேர் வேட்புமனு தாக்கல்

in News / Local

குமரி மாவட்டத்தில்  ஒரே நாளில் 17 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். பத்மநாபபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட ஜான் தங்கம் மனுதாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் 

தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆகியவை வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட மொத்தம் 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில் நேற்று 17 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதாவது கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் போட்டியிட மக்கள் நீதி மைய வேட்பாளர் பி.டி.செல்வகுமார், அ.ம.மு.க. வேட்பாளர் செந்தில்முருகன், நாம் தமிழர் வேட்பாளர் சசிகலா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் அம்மு ஆன்றோ மற்றும் காந்தி, காந்திராஜ் ஆகிய 2 பேர் சுயேச்சையாகவும் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

ஜான் தங்கம் மனு தாக்கல்

பத்மநாபபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜான்தங்கம் நேற்று சப்-கலெக்டர் சிவகுருபிரபாகரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அப்போது குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், பா.ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தர்மராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். 

    

முன்னதாக ஜான்தங்கம் நேற்று காலை 10.30 மணிக்கு தொண்டர்களுடன் தக்கலை எம்.ஜி.ஆர்.சிலைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் திரளான தொண்டர்களுடன் பேரணியாக கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.

இதே போல் அ.ம.மு.க. வேட்பாளர் ஜெங்கின்ஸ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீலன், சுயேச்சை வேட்பாளர் அருள்மணி ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் நடைபெறுவதையொட்டி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

குளச்சல்-கிள்ளியூர் 

குளச்சல் சட்டசபை தொகுதியில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு (விடுதலை) கட்சி வேட்பாளர் அந்தோணிமுத்து, விளவங்கோடு சட்டசபை தொகுதியில் உலக மக்கள் கட்சி வேட்பாளர் வசந்தீஸ்வரன் ஆகியோர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

கிள்ளியூர் சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பீட்டர் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருக்கு மாற்று வேட்பாளராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பெறிலா என்பவரும் மனுதாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற தொகுதி 

இதுபோன்று கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனிட்டர் ஆல்வின் மற்றும் ராஜீவ், டென்னிசன் ஆகியோர் சுயேச்சையாகவும் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் மொத்தம் 17 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top