காமராஜர், கருப்பு காந்தி, மக்கள் தலைவர், படிக்காத மேதை, வரலாறும் பூகோளமும் ஏடுகளில் படிக்கவில்லை. அனுபவபூர்வமாக தமிழகம் முழுவதும் காடு, மலை, வயல் என பூகோளம் அறிந்தவர். அவரை பற்றி இப்படி கூறிக்கொண்டே போகலாம்.
இந்திய அளவில் தமிழகத்தில் தான் பிற்படுத்தப்பட்டோர்களுக்கான இட ஒதுக்கீடு கல்வி வேலை வாய்ப்புகளில் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர். இது சமூக பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.
1954-ம் ஆண்டு ஏப்ரல் 18-ந் தேதி தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்ற காமராஜர், காங்கிரசில் எதிர் அணியாக இருந்த சி.சுப்பிரமணியத்தை தனது அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவி வழங்கிய பண்பாளர். சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர், உறுப்பினர்களின் கருத்தையும் கேட்கும் மனோ பக்குவம் கொண்டவர்.
பெருந்தலைவர் முதல்- அமைச்சராக பொறுப்பேற்றதும் தனது காரில் இருந்த சைரன் மற்றும் சிவப்பு விளக்கையும் அகற்ற உத்தரவிட்டார்.
இந்திய வரலாற்றில் முதியோர் ஓய்வூதியம் அறிவித்த பெருமகனார். ஒரு சமயம் சாப்பாடு கூடை சுமந்த வயதான பெண்ணின் குமுறல்களை கேட்டு, மாதம் ரூ.20 ஓய்வூதியமாக ஆதரவில்லாத, வருமானம் இல்லாத முதியோர்களுக்கு வழங்க உத்தரவிட்டார். தேர்தல் நேரத்தில் சீனிவாசன் என்பவர் கணக்குப்பிள்ளையாக இருந்தார். அப்போது, பிரசாரம் செய்த தொண்டர்கள் சோர்வாக இருந்தனர். தொண்டர்களிடம் விசாரித்த தலைவர், எங்களுக்கு தினமும் சாம்பார் சாதம் அல்லது ரசம் சோறு மட்டுமே சீனிவாசன் வழங்குகிறார் என்றதும், தொண்டர்கள் மனதையும், வயிற்று பசியையும் அறிந்த பெருந்தலைவர், தொண்டர்கள் விரும்பும் சைவ, அசைவ உணவை ஏற்பாடு செய்தார்.
உணவு தனது சுய விருப்பம் என 60 ஆண்டுகளுக்கு முன்பே உணர்த்தினார். அரசுக்கு இணையான அதிகாரம் கொண்ட உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தி ஊராட்சி ஒன்றிய (பிளாக்) அலுவலகங்களை உருவாக்கினார். பெருநகரங்கள், பள்ளி, கல்லூரிகளில் தான் நூலகம் இருந்ததை குக்கிராமங்கள், பட்டி தொட்டி எங்கும் நூலகம் அமைத்திட பொது நூலகசட்டத்தை இயற்றினார் காமராஜர். கிராம மக்கள் பொது அறிவு வளர்த்திடவும், நல்ல தரமான புத்தகங்களை படித்திடவும் வழிவகை செய்தார்.
தமிழகம் எங்கும் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளை கட்டினார். தனியார் பள்ளிகளை அரசு பள்ளிகளாக வகை மாற்றம் செய்தார். ஓராசிரியர் பள்ளிகளை திறந்தார். ஆசிரியர் பயிற்சி கொடுத்து 8-ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கும், 11-ம் வகுப்பு படித்தவர்களுக்கும் ஆசிரியர் பயிற்சிகள் வழங்கி பள்ளிகளில் ஆசிரியர்களாக மாற்றினார். மாணவர்கள் பள்ளிக்கு வரத்தொடங்கினார்கள். மாணவர்கள் இடைநிற்றலை தடுத்திட மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.
குமரி மாவட்ட வளர்ச்சி பணிகளான நெய்யார் இடதுகரை சானல், சிற்றால்-1, சிற்றார்-2 அணைகள், பெருஞ்சாணி அணை, சிற்றார் பட்டணம் கால்வாய், இரட்டை கரை கால்வாய், கோதையார் நீர்மின் உற்பத்திநிலையம் சுமார் 50 ஆயிரம் எக்டர் நிலப்பரப்பில் 9 கோட்டங்களுடன் (கீரிப்பாறை, மணலோடை, மருதம்பாறை, சிற்றார், கோதையார், மைலார் போன்ற) அரசு ரப்பர் கழக ரப்பர் தோட்டங்கள், ஆரல்வாய்மொழி கன்னியாஸ்பின், ஈத்தாமொழி கயிறு தொழிற்கூடம், ராணித்தோட்டம் அரசு பஸ் பணிமனை, பஸ் கட்டமைப்பு பிரிவு, கோணம், காப்புகாட்டில் உணவு கிட்டங்கிகள் என பெருந்தலைவரின் வளர்ச்சி பணிகள் நீண்டு கொண்டே போகும்.
தமிழகத்தில் திருச்சி பெல், நெய்வேலி என்.எல்.சி., பெரம்பூர் ஐ.சி.எப்., ஆவடி டாங்கு தொழிற்சாலை, ஊட்டி பிலிம் கார்டயட் தொழிற்சாலை, துவரங்குறிச்சி பாய்லர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, கிண்டி சிறு குறு தொழிற்சாலை மட்டுமல்லாது தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட அணை கட்டுதல், பாசன கால்வாய்கள் என பெருந்தலைவர் ஆட்சி காலத்தில் விவசாயம், தொழில்துறை செழித்து வேலைவாய்ப்புகள் பெருகியது.
தமிழகத்தை இருளில் தள்ளி விட்டு 1975-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி இந்த உலகை விட்டு மறைந்தார். அவரது புகழ் உலகம் உள்ளவும் நிலைக்கும்.
0 Comments