தக்கலை அருகே அண்ணியை கொலை செய்துவிட்டு தலைமறைவான கொழுந்தன் 3 ஆண்டுகளுக்கு பின் கைது!

தக்கலை அருகே அண்ணியை கொலை செய்துவிட்டு தலைமறைவான கொழுந்தன் 3 ஆண்டுகளுக்கு பின் கைது!

in News / Local

தக்கலை அருகே கடந்த 3 வருடங்களுக்கு முன் அண்ணிமீது மண்ணெண்ணெய் விட்டு தீ வைத்து எரித்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவான கொழுந்தனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தக்கலை அருகே உள்ள சடயமங்கலம் முரடன் விளையை சேர்ந்தவர் தாணுபிள்ளை இவரது மகன்கள் சுரேஷ்குமார் 47, ஸ்ரீகண்டன் 45 ஆகியோர் ஆவார்கள். சுரேஷ்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சிவகலா இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு.

ஸ்ரீகண்டன் கூலித் தொழில் செய்து வந்தார். திருமணம் ஆகவில்லை எல்லோரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் ஸ்ரீகண்டன் வேலைக்கு சென்று விடுவார். சிவகலா போனில் யாரிடமாவது பேசிக் கொண்டிருப்பார். இந்நிகழ்ச்சி நாள்தோறும் நடந்தது. இதை அண்ணியிடம் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என கொழுந்தன் கேட்டுள்ளார். இது இருவருக்குள்ளும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

18-06-2017 அன்று ஸ்ரீகண்டன் திடீரென வீட்டுக்கு வரும்போது சிவகலா யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தார்‌. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபம் கொண்ட ஸ்ரீகண்டன் சிவகலாவை கீழே தள்ளி விட்டு அருகில் இருந்த மண்ணெண்ணையை தலைவழியே விட்டு தீ வைத்து விட்டார். இதில் சிவகலா பலியானார். ஸ்ரீகண்டன் தலைமறைவானார்.

தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீகண்டனை தேடி வந்தனர். கடந்த மூன்று வருடங்களாக காவல்துறையை ஏமாற்றி விட்டு தலைமறைவான ஸ்ரீகண்டனை கைது செய்ய மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் தக்கலை கோட்டை டிஎஸ்பி ராமச்சந்திரன் ஆலோசனைப்படி இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் வழிகாட்டுதலில் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தத் தனிப்படையில் ஈடுபட்ட தலைமை காவலர்கள் சிம்சன், ராபர்ட் ராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் உட்பட 3 பேரும் கடந்த பல நாட்களாக கேரள மாநிலத்திலுள்ள கொல்லம், பட்டனம்திட்டா ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக கடை கடையாக சென்று ஸ்ரீகண்டன் படத்தை காட்டி தேடினர். கடைசியாக ஸ்ரீகண்டன் கோழஞ்சேரியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்று துருவி துருவி விசாரித்தனர்.

இறுதியாக கோழஞ்சேரியில் பதுங்கியிருந்த ஸ்ரீ கண்டனை சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் தலைமை காவலர்கள் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். கைது செய்யப்பட்ட ஸ்ரீகண்டன் மீது 2014-ல் இரணியல் காவல் நிலையத்திலும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கைது செய்யப்பட்ட ஸ்ரீகண்டன் போலீஸ் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, நான் தினந்தோறும் வேலைக்கு சென்று விடுவேன்.

நான் மாலையில் வீட்டுக்கு வரும்போது அண்ணி போனில் பேசிக் கொண்டிருப்பார். இதை நான் தட்டிக் கேட்டேன். இதனால் எங்களுக்குள் கடும் பகையை உருவாகியது. என்னை மரியாதை இல்லாமல் பேசியதால் கோபமடைந்த நான் அவரை கீழே தள்ளி விட்டேன். எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து அவர் மீது ஊற்றி தீ வைத்தேன் என கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top