குமரியில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கொடியேற்றுகிறார் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

குமரியில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கொடியேற்றுகிறார் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

in News / Local

நாடு முழுவதும் நாளை (சனிக்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தேசியகொடி ஏற்றி வைக்கிறார்.

இதனையொட்டி போலீசார் தீவிர அணி வகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு விழா நடைபெறும் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மேடை அமைத்தல், மைதானத்தை சமப்படுத்துதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதே சமயம் இந்த ஆண்டு கொரோனா அச்சம் நிலவுவதால் சுதந்திர தின விழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

இதற்காக மாவட்டம் முழுவதும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் போலீசார் மாவட்டம் முழுவதும் பல்வேறு குழுக்களாக பிரிந்து தீவிர வாகன சோதனையையும் தொடங்கி இருக்கிறார்கள். தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் யாரேனும் சந்தேகப்படும்படியாக தங்கி உள்ளனரா? என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், மார்க்கெட்டுகள் மற்றும் சந்தைகளில் கூடுதல் போலீசார் போடப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. கடலோர பகுதிகளில் அந்தந்த சரக போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் ரெயில் போக்குவரத்து இல்லை. எனினும் சரக்கு ரெயில்கள் போக்குவரத்து இருக்கிறது. எனவே ரெயில் தண்டவாளங்கள் மற்றும் ரெயில்வே பாலங்களில் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top