ராமநாதபுரம் மாவட்டம் சித்திரக்குடி அருகே உள்ள வீரவனூர் பகுதியில் காதலனை சந்திக்க செல்லும் இளம்பெண்களையும், திருமணமான குடும்பப் பெண்களையும் குறி வைத்து ஒரு கும்பல் செயல்பட்டு வந்துள்ளது. அந்த கும்பல், பெண்கள் அவர்களது ஆண் நண்பர்களுடன் தனியாக சந்தித்து பேசும் போது வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு அவர்கள் வீடு திரும்பும் போது நகை மற்றும் பணத்தை பறிக்கும் செயலை வாடிக்கையாக செய்து வந்துள்ளது. இதே போல வீரவனூர் பகுதியில் வசித்து வரும் 25 வயதான திருமணமான பெண் ஒருவர் இவர்களிடம் சிக்கியிருக்கிறார்.
இவர் தனது அத்தை மகனை பார்க்க சென்ற போது, இந்த கும்பல் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு கணவனிடம் கூறி விடுவேன் என மிரட்டி பணம் பறித்து வந்துள்ளது. இது தொடர்பாக அந்த பெண்ணின் உறவினர் ராமநாதபுரம் காவல் துறைக்கு அளித்த புகாரின் பேரில், தனிப்படை அமைத்த போலீசார் முகமது, இளஞ்செழியன், சேதுபாண்டி, தனசேகரன், காளிதாஸ், விஷ்ணு ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். அதன் பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது பெண்களிடம் பணம் நகை பறிப்பதையும் விதவை பெண்கள் சிக்கினால் அவர்களை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்வதும், பெண்களின் பின்னணியை பார்த்துக் கொண்ட பிறகே பின்தொடர்வதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் பல பெண்களை மிரட்டி பணம் பறித்து, அந்த பணத்தில் மது, கஞ்சா என ஜாலியாக சுற்றித்திரிந்ததும் தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே பொள்ளாச்சி சம்பவமும், நாகர் கோவில் காசியின் செயலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை வெளிச்சம் போட்டு காட்டிய நிலையில், இது போன்ற சம்பவங்கள் தொடர்வது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியாமாக வெளியே வந்து புகார் அளித்தால் தான் அந்த கொடூரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அந்த தகவல் ரகசியமாக காக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments