விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு ரூ.80 லட்சத்தில் புதிய படகு

விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு ரூ.80 லட்சத்தில் புதிய படகு

in News / Local

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு ரூ.80 லட்சம் செலவில் புதிய படகு வாங்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய இரண்டு குளு குளு வசதி கொண்ட அதிநவீன சொகுசு படகுகளை ரூ.8 கோடி செலவில் வாங்கி உள்ளது. ஆனால் இந்த 2 படகுகளும் இதுவரை இயக்கப்படவில்லை.

இந்த நிலையில் விவேகானந்தர் மண்டபம் சார்பில் புதிய படகு வாங்கப்பட்டு உள்ளது. இதை விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கொச்சியில் உள்ள ஐஸ்மார் என்னும் படகு கட்டும் நிறுவனம் இந்த படகை கட்டி முடித்தது. 49.6அடி நீளமும் 29.5அடி அகலமும் 26 டன் எடையும் கொண்ட இந்த படகு நேற்று கொச்சியில் இருந்து கன்னியாகுமரி வந்து சேர்ந்தது. கடந்த 4-ந்தேதி கொச்சியில் புறப்பட்ட படகு நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் கன்னியாகுமரி வந்தடைந்தது. படகை விவேகானந்தர் மண்டபத்தை சேர்ந்த கல்யாணி ஓட்டி வந்தார். அவருடன் படகு கட்டும் நிறுவனத்தை சேர்ந்த 8 பேர்களும் வந்தனர்.

கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகுத் துறைக்கு வந்த படகை கேந்திர நிர்வாக அதிகாரி அனந்தஸ்ரீ பத்மநாதன் தலைமையில் அதிகாரிகளும், ஊழியர்களும் வரவேற்றனர். ஏற்கனவே விவேகானந்த கேந்திரா தனியாக ஒரு படகை பயன்படுத்தி வந்தது. ஏக்நாத் என்று பெயரிடப்பட்ட அந்த படகு கடந்த 50 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டதை தொடர்ந்து அது சேவையிலிருந்து நிறுத்தப்பட்டது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top