குமரி வந்த பிரதமர் மோடி தமிழில் வணக்கம் என்று கூறி அவர் பேச்சை தொடங்கினார்!

குமரி வந்த பிரதமர் மோடி தமிழில் வணக்கம் என்று கூறி அவர் பேச்சை தொடங்கினார்!

in News / Local

குமரி மாவட்டம் கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நேற்று மதியம் நடந்த விழாவில்.பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மத்திய அரசின் ரூ.40 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைத்தார்.

விழாவில் நாகர்கோவில் பார்வதிபுரம் சந்திப்பு மற்றும் மார்த்தாண்டம் சந்திப்பு ஆகியவற்றில் ரூ.314 கோடியில் கட்டப்பட்டுள்ள இரண்டு மேம்பாலங்கள், மதுரை-ராமநாதபுரம் இடையே நான்கு வழிச்சாலை, பணகுடி- கன்னியாகுமரி இடையே நான்கு வழிச்சாலை ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்காக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ராமேசுவரம்- தனுஷ்கோடிக்கு புதிய ரெயில் வழி தடத்தில் பாலம் அமைப்பதற்கான அடிக்கலையும் பிரதமர் மோடி நாட்டினார்.

பின்னர் அவர் தமிழில் வணக்கம் என்று கூறி விட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் இன்று கன்னியாகுமரியில் இருப்பதில் பெருமை அடைகிறேன். தொடக்கத்தில் ஜெயலலிதாவுக்கு என்னுடைய புகழஞ்சலியை செலுத்துகிறேன். அவர் தமிழகத்திற்கு ஆற்றிய நல்ல பணிகள் தலைமுறை, தலைமுறையாக நிற்கும். அந்த வழியில் தற்போதைய தமிழக அரசு தொலைநோக்கு திட்டங்களை இடைவிடாமல் செய்து கொண்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

நம்முடைய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தமிழகத்தை சேர்ந்தவர். மேலும் நம்முடைய விமானி அபினந்தனும், தமிழகத்தை சேர்ந்தவர் என்பது மகிழ்ச்சிக்குரியது. காந்தி அமைதி விருது பெற்ற விவேகானந்தா கேந்திராவுக்கு எனது பாராட்டுகள். சமூக பணியாகவும் விவேகானந்தா கேந்திரா பலவற்றை செய்து வருகிறது. இது உத்வேகமாகவும், பாராட்டும் விதமாகவும் உள்ளது.

சில நிமிடங்களுக்கு முன்பாக ரெயில் பாதை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இன்று அடிக்கல் நாட்டி உள்ளேன். மதுரையில் இருந்து சென்னைக்கு மிக வேகமாக செல்லும் தேஜஸ் ரெயிலானது இப்போது கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் நவீனமயமானது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. சென்னையில் உள்ள ஐ.சி.எப்.பில் இந்த ரெயில் தயாரிக்கப்பட்டது. 1964-ல் ஏற்பட்ட புயலால் பாம்பன் தண்டவாள பாலம் சேதமடைந்தது. 50 ஆண்டுகளாக இந்த பாலத்தை சரிசெய்ய யாரும் முன்வரவில்லை. தற்போது புதிதாக ராமேசுவரம்-தனுஷ்கோடிக்கு புதிய ரெயில் தடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும்.

இந்தியா இன்று உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நிலையுடன் உள்ளது. அதற்கேற்ப தலைமுறைக்கான கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறையில் முன்னணியில் வருகின்ற நம் நாட்டில், மிகப்பெரிய மருத்துவ காப்பீடான ஆயுஷ் மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

21-வது நூற்றாண்டில் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது. அந்த முறையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கான கவுரவ நிதி திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 5 ஏக்கருக்கு குறைவான விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் பெறுவார்கள்.

3 தவணைகளில் ரூ.6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதுவரை 1 கோடி 10 லட்சம் விவசாயிகளுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் அறிவித்த திட்டம், இந்த மாதத்திலேயே நடைமுறைக்கு வந்துள்ளது. 24 நாட்களுக்குள் நடைமுறைக்கு கொண்டு வருவது கற்பனை செய்ய முடியாத ஒன்று. அந்த வேகத்தில் 24 மணி நேரமும் நாம் இடைவிடாது செயல்பட்டு இருக்கிறோம்.

இது ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் திட்டம். அரசு வேகமாக செயல்படும் போது, இவை அனைத்தும் சாத்தியமாகும். 10 ஆண்டுகளில் ரூ.7½ லட்சம் கோடி விவசாயிகளுக்கு வழங்கப்படும். தெய்வபுலவர் திருவள்ளுவர், அரிய வாய்ப்பு கிடைக்கும் போது அதனை பற்றி கொண்டு அரிய செயல்களை செய்ய வேண்டும் என்று கூறுகிறார். அதற்கேற்ப, துணிச்சலான முடிவை எடுக்கும் ஒரு அரசு தேவை என்பதற்காக கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் அறுதி பெரும்பான்மையை கொடுத்தீர்கள்.

மக்கள் விரும்புவது நேர்மையை, குடும்ப அரசியலை அல்ல, மக்கள் விரும்புவது வாய்ப்புகளை, தடைகளை அல்ல, மக்கள் விரும்புவது அனைவருக்குமான முன்னேற்றம், வாக்கு வங்கி அரசியல் அல்ல. அனைவருக்குமான முன்னேற்றத்துக்காக பல சரித்திரம் வாய்ந்த முக்கிய முடிவுகளை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிவெடுத்துள்ளது.

மீனவர்களுக்கான தனி இலாகாவை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஏற்படுத்தி உள்ளது. ஆனால் முந்தைய அரசாங்கம் உங்களுடைய வாக்குகளை மட்டும் பெற்று கொண்டார்கள். தற்போது விவசாய கடன் அட்டை திட்டம், மீனவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவினால் மீனவர்களுக்கு கடல்சார் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளது. 300 கோடி ரூபாய் ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

முன்னாள் பாதுகாப்புபடை அதிகாரிகளின் ஆக்கப்பூர்வமான கருத்தின் அடிப்படையில் ஒரு பதவி ஒரு பென்சன் திட்டத்தை அமல்படுத்தினோம்.. நாடு பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகிறது. 2004-ல் இருந்து பல்வேறு இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. அப்போது மக்கள் என்ன எதிர்பார்த்தார்களோ, அதை அந்த காலத்தில் உள்ள அரசாங்கம் அதனை செய்யவில்லை. பயங்கரவாதிகளுக்கு எதிராக பெரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

புலவாமா தாக்குதலுக்கு பிறகு, தற்போது துணிச்சலான நடவடிக்கையை ராணுவம் எடுத்தது. ராணுவத்துக்கு என்னுடைய வணக்கங்களை தெரிவிக்கிறேன். அவர்களுடைய விழிப்புணர்வு தான் நம் நாட்டை பாதுகாக்கிறது. மும்பை தாக்குதல் சமயத்தில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த மக்கள் விரும்பினர், விமான படையும் தயாராக இருந்தது. ஆனால் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதனை தடுத்தது. தற்போது ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பயங்கரவாதிகளால் ஏற்படும் பாதிப்பு வட்டியும், முதலுமாக திருப்பி கொடுக்கப்படும்.

கடந்த சில நாட்களாக வரும் நிகழ்வுகள், ராணுவத்தின் வலிமையை எடுத்து காட்டுகிறது. இது நாட்டை ஒன்றாக சேர்த்து இருக்கிறது. சாதாரண மக்களிடம் கிடைக்கிற வரவேற்பு மிகப்பெரியது. அந்த வகையில் ஒவ்வொரு குடிமகனுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். துரதிர்ஷ்டவசமாக மோடி வெறுப்பை நாட்டிற்கு எதிரான வெறுப்பாக சிலர் காட்டி வருகிறார்கள், இவர்கள் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ யுத்தத்தை சந்தேகிக்கிறார்களா?, எதிர்க்கட்சிகளின் இதுமாதிரியான அறிக்கைகள் பாகிஸ்தானுக்கு உதவிகரமாக உள்ளது. இந்தியாவை காயப்படுத்துகிறது. அங்குள்ள நாடாளுமன்றத்திலும், வானொலியிலும் எதிர்க்கட்சிகளின் அறிக்கையை மகிழ்ச்சியோடு மேற்கோள் காட்டி பேசுகிறார்கள்.

இவர்களிடம் ஒரு விஷயத்தை கேட்க விரும்புகிறேன், ராணுவத்தை சந்தேகிக்கிறீர்களா, அல்லது இந்த மண்ணில் இருக்கிற பயங்கரவாதிகளுக்கு உதவிகரமாக இருக்கிறீர்களா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இவர்களுக்கு ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன், அரசியலை பலப்படுத்துவதற்காக, நாட்டை பலவீனப்படுத்தாதீர்கள், முதலில் நாம் இந்தியர்கள், நாட்டின் பாதுகாப்பு மட்டுமே நமக்கு முதன்மையானது.

இந்த அரசங்கம் ஊழலுக்கு எதிரான சரித்திர நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் ஊழல் செய்த அனைவரும் பதில் சொல்ல கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ரீ கவுண்டிங் மந்திரி, நடுத்தர வர்க்கத்தினரை காயப்படுத்தினார். ஆனால் தற்போது அவருடைய குடும்பத்தின் ஜாமீனுக்காக கோர்ட்டின் முன் காத்திருக்கிறார்.

ஊழல்வாதிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கையை எப்படி எடுக்கிறமோ, அதேபோல் நேர்மையாக வரி செலுத்துவோரையும் கவனிக்கிறோம். கடந்த பட்ஜெட்டில் அவர்களுக்கு வரிவிலக்கு அளித்துள்ளோம். இதனை முந்தைய அரசு கண்டு கொள்ளவில்லை. பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பொருளாதார கலாசாரத்தை, குடும்ப அரசியல், நண்பர்களுக்கு ஆதாயம் ஏற்படும் வகையில் கொண்டு வந்தது. இந்த பொருளாதார கலாசாரத்தை முதன் முதலில் எதிர்த்தவர் தமிழகத்தை சேர்ந்த ராஜகோபாலச்சாரியார்.

தற்போது இந்தியா, தொழில் செய்வதில் சுலபமான நாடுகளில் 77-வது இடம் பிடித்துள்ளது. அதாவது 65 இடங்கள் முன்னேறி இருக்கிறோம். அதுபோல் சிறு, குறு தொழில் திட்டங்களுக்கு கடன் வழங்குகிறோம். தற்போது 52 நிமிடங்களில் 1 கோடி ரூபாய் கடன் பெற முடியும். இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு முத்ரா வங்கி கடன் திட்டத்தை தொடங்கியது. அந்த வகையில் 15 கோடி தொழில் முனைவோருக்கு 7 லட்சம் கோடி கடன் வழங்கியுள்ளது. எதிர்கட்சிக்கு சமூக நீதியில் எந்த உறுதிபாடும் கிடையாது.

இருமுறை அம்பேத்கரை தோற்கடித்த கட்சி காங்கிரஸ் தான். அதேபோல் இந்த அரசு எஸ்.சி. எஸ்.டி சட்டத்தில் மிக கடுமையான சீர்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. வர இருக்கிற 2019 தேர்தல், இரண்டு பிரதான பக்கங்களை கொண்டது. பலம், ஸ்திரத்தன்மை நம்முடையது. பலவீனம், தாக்குதலுக்கு உள்ளாகும் சூழ்நிலை மற்றொரு பக்கமாக உள்ளது. நம்முடைய தலைமையில் வேலை செய்யும் நிலையை நாடே அறியும். அவர்களால் தலைமையை நாட்டுக்கு தர முடியவில்லை. எந்தவித குறிக்கோளும் கிடையாது. எந்தவித வெட்கமும் இல்லாமல் ஊழல் செய்கிறார்கள்.

2009-ம் ஆண்டு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மந்திரிசபை இலாகாக்களை எப்படி பகிர்ந்து கொண்டது என்பதை நாடே பார்த்தது. மந்திரிகளை பிரதமர் தேர்வு செய்யவில்லை. தொலைபேசியில் மந்திரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கலப்பட அரசு என்பது, ஒரு பிணைக்கைதியாக இருக்கும். இந்தியாவின் 130 கோடி மக்கள் தான் என் குடும்பம். நான் அவர்களுக்காகவே வாழ்வேன், அவர்களுக்காகவே வீழ்வேன். நான் பொது வாழ்வில் இருப்பது எந்த குடும்ப அரசியலையும் முன்னுக்கு கொடுப்பதற்காக அல்ல. இந்தியாவின் வளர்ச்சிக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன். இதற்கான ஆசியையும், ஆதரவையும் எனக்கு நீங்கள் தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், விஜயகுமார் எம்.பி. மற்றும் பலர் கலந்து கொண்டனர். பாரதீய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளரா எச் ராஜா பிரதமர் மோடி ஹிந்தியில் பேசியதை தமிழில் மொழிபெயர்த்து கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top