குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் முக கவசம் அணியாத 1,780 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தார்கள்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதிலும் குறிப்பாக தனிநபர் வெளியே செல்லும் போதும், வணிக நிறுவனத்தில் பணியாற்றக்கூடியவர்களும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையை அமல்படுத்த போலீசாரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தீவிர முனைப்பு காட்டி வருகிறார்கள். முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாதது தெரியவந்தால், அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தற்போது முக கவச சோதனையை போலீசாரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தீவிரப்படுத்தி உள்ளனர். மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மட்டுமே இதுவரை அபராதம் விதித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் போலீசாரும் முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை தொடங்கி உள்ளனர்.
ஒவ்வொரு போலீஸ் நிலைய பகுதிகளிலும் குறைந்த பட்சம் தலா 100 பேருக்காவது அபராதம் விதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் குமரி மாவட்டம் முழுவதும் போலீசார் சார்பில் 1,780 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, தலா ரூ.200 வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தியவர்களுக்கு உடனடியாக பணம் செலுத்தியதற்கான ரசீதும் வழங்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் சப்- டிவிஷனில் 435 பேர், தக்கலை சப்-டிவிஷனில் 524 பேர், குளச்சல் சப்-டிவிஷனில் 430 பேர், கன்னியாகுமரி சப்-டிவிஷனில் 391 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. இது தவிர இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், இரண்டு பேருக்கு மேல் அமர்ந்து வந்தவர்கள் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தொடர்பாக 3,794 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த நடவடிக்கைகள் இனி வரும் நாட்களில் தீவிரப்படுத்தப்படும் என்பதால், அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்தும், கார்களில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிந்தும் பயணம் செய்ய வேண்டும் எனவும் போலீசார் கேட்டுக் கொண்டனர்.
0 Comments