குமரியில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

குமரியில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

in News / Local

குமரியில் நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. இதற்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல்,6 சட்டசபை தொகுதி பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் 13 வேட்பாளர்களும், குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகளில் தலா 12 வேட்பாளர்களும், விளவங்கோடு மற்றும் நாகர்கோவில் தொகுதிகளில் தலா 15 வேட்பாளர்களும், கிள்ளியூர் தொகுதியில் 14 வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். ஏற்கனவே சட்டசபை தொகுதி வாரியாக மின்னணு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மின்னணு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டு ஆறு இடங்களில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏற்கனவே அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான மின்னணு எந்திரங்கள் தனித்தனியாக தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி சட்டசபை தொகுதிக்கான மின்னணு எந்திரங்கள் பூதப்பாண்டி தாலுகா அலுவலகத்தில் இருந்து அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதே போல குளச்சல் சட்டசபைத் தொகுதிக்கான மின்னணு எந்திரங்கள் கல்குளம் தாலுகா அலுவலகத்தில் இருந்தும், பத்மநாபபுரம் சட்டசபை தொகுதிக்கான மின்னணு எந்திரங்கள் பத்மநாபபுரம் நகராட்சி அலுவலகத்தில் இருந்தும், கிள்ளியூர் சட்டசபை தொகுதிக்கான மின்னணு எந்திரங்கள் தேவிகோடு அரசு உயர்நிலைப்பள்ளியில் இருந்தும் கொண்டு செல்லப்படுகிறது. விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கான மின்னணு எந்திரங்கள் மேல்புறம் யூனியன் அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதே போல் நாடாளுமன்ற தொகுதிக்கான மின்னணு எந்திரங்களும் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும்.

மேலும் வாக்கு பதிவிற்கு தேவையான பொருட்களும் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக வாக்குச்சாவடிக்கு வருபவர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி வாக்களிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதையொட்டி ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் பேருக்கும் குறைவானவர்களே வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் வாக்குச்சாவடி 1634-ல் இருந்து 2 ஆயிரத்து 234 வாக்குச்சாவடிகளானது.மாவட்டத்திலுள்ள 2 ஆயிரத்து 243 வாக்குச்சாவடிகளிலும் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதில் 272 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். வாக்கு பதிவு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதே போல வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட கூடிய போலீசாருக்கு வாக்குச்சாவடி ஒதுக்கும் பணி நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான போலீசார் கலந்துகொண்டனர். அவர்களுக்கு சட்டசபை தொகுதி வாரியாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

முன்னதாக தொகுதி வாரியாக வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் வாகனங்களுக்கு நம்பர் ஒட்டும் பணி மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. மேலும் எந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்புக்காக செல்லும் போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top