தனியார் பள்ளிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

தனியார் பள்ளிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

in News / Local

நாகர்கோவிலில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத தனியார் பள்ளிக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.5ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். 

கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்று தடுப்பு நடவடிக்கையில் அந்தந்த மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசும் தீவிரம் காட்டி வருகின்றன. கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புக்குள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், கேரள எல்லையையொட்டி உள்ள குமரி மாவட்டத்தில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

அதன்படி மாநகராட்சி ஆணையர் ஆ‌ஷா அஜித் உத்தரவின்படி, சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் 2 தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், கடைகள், கல்வி நிறுவனங்கள் போன்றவைகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுகாதார ஆய்வாளர்கள் ராஜே‌‌ஷ், தியாகராஜன், ராஜன் ஆகியோர் அடங்கிய குழு நேற்று ஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள கடைகள், வணிக மற்றும் கல்வி நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.

அப்போது, ஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் முககவசம் அணியாமல் இருப்பதை கண்டனர். இதையடுத்து அதிகாரிகள், பள்ளி நிர்வாகத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் முககவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்த 13 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன்மூலம் மொத்தம் ரூ.7,500 அபராத தொகை வசூலானது.

இதேபோல் நாகர்கோவில் கூழக்கடை பஜாரில் நடத்திய சோதனையில் ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அந்த கடைக்கு ரூ.1000 அபராதம் விதித்தனர். 

இதேபோல் சுகாதார ஆய்வாளர்கள் பகவதி பெருமாள், மாதவன்பிள்ளை, ஜான் ஆகியோர் கோட்டார், கோர்ட்டு ரோடு, அண்ணா பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் சோதனையிட்டனர். அப்போது அப்பகுதிகளில் தொற்று விதிமுறைகளை கடைபிடிக்காத பொதுமக்கள் மற்றும் டீக்கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்களுக்கு அபராதம் விதித்தனர். அதன்படி மொத்தம் ரூ.5,500 அபராதம் தொகை வசூலிக்கப்பட்டன.

 

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top