ராஜாக்கமங்கலம் பகுதியில் குழிகளில் புதைத்து வைத்து பாதுகாக்கப்பட்ட ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன!

ராஜாக்கமங்கலம் பகுதியில் குழிகளில் புதைத்து வைத்து பாதுகாக்கப்பட்ட ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன!

in News / Local

கடல் ஆமைகள் இனப்பெருக்க காலங்களில் கடற்கரையில் முட்டைகள் இடுவது வழக்கம். இந்த முட்டைகளை விலங்குகள், மனிதர்கள் அழித்து விடுவதால், கடல் ஆமை இனம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அழிந்துவரும் கடல் ஆமைகளை பாதுகாப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் கடல் ஆமைகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளான ராஜாக்கமங்கலம் துறை, ஆயிரங்கால் பொழிமுகம், அழிக்கால், தெக்குறிச்சி, சொத்தவிளை, வீரபாகு பதி போன்ற கடற்கரை பகுதிகளை வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். ஆமைகள் இனப்பெருக்க காலங்களில் இடும் முட்டைகளை சேகரித்து குஞ்சு பொறிக்கும் வகையில் கடற்கரைகளில் குழி தோண்டி புதைத்து வைப்பார்கள். அவற்றில் இருந்து குஞ்சுகள் வெளியே வந்தவுடன் குஞ்சுகளை பாதுகாப்பாக கடலில் விடுவார்கள்.

அதன்படி, மாவட்ட வன அலுவலர் ஆனந்த் ஆலோசனையின் பேரில் வனசரகர் புஷ்பராஜா தலைமையில் வன ஊழியர்கள் திலீபன், பூபதி மற்றும் பலர் அடங்கிய குழுவினர் கடந்த மாதம் 2-ந் தேதி முதல் சேகரிக்கப்பட்ட 2 ஆயிரத்து 533 கடல் ஆமை முட்டைகளை கடற்கரையில் பல்வேறு குழிகளில் புதைத்து வைத்து அவற்றை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று தெக்குறிச்சி தென்பாற்கடற்கரையில் முட்டைகள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு குழியில் இருந்து 84 குஞ்சுகள் வெளியே வந்தன. அவற்றை மாவட்ட வன அலுவலர் ஆனந்த் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே கடலில் விட்டார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, உதவி கலெக்டர் பவன்குமார் க.கிரியப்பனவர், பயிற்சி கலெக்டர் பிரதிக் தயாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top