பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் குமரியில் ரூ.19 லட்சம் முறைகேடு 241 வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை!

பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் குமரியில் ரூ.19 லட்சம் முறைகேடு 241 வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை!

in News / Local

பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சீபுரம், சேலம், செங்கல்பட்டு, குமரி உள்பட 13 மாவட்டங்களில் ரூ.110 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உத்தரவின் பேரில் இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த முறைகேட்டில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகளும், வேளாண்மைத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்துக்கு பிறகு 14 ஆயிரத்து 175 பேர் இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்துள்ளளர். இதில் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் முறைகேடாக பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் பணம் பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 241 பேர் குமரி மாவட்டத்தில் வசித்து வரக்கூடியவர்கள். மீதமுள்ள சுமார் 400-க்கும் மேற்பட்டோர் வெளி மாவட்டங்களில் வசிக்கும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்ட பகுதிகளில் இருந்து விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் பலர் அரசு ஊழியர்களாகவும், அதிகாரிகளாகவும் பணியாற்ற கூடியவர்கள் ஆவர். பலர் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று அரசின் ஓய்வூதியம் பெறக்கூடியவர்கள் ஆவர். சிலர் விவசாய நிலம் இல்லாமலேயே இந்த திட்டத்தில் பயன் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக ரூ.2 ஆயிரம் பெற்றுள்ளனர். ஒருசிலர் மட்டும் தான் ரூ.4 ஆயிரம் வரை பெற்றுள்ளனர்.

வெளி மாவட்டங்களில் வசிக்கும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வங்கி கணக்குகள் போன்றவை வெளி மாவட்டங்களில் இருப்பதால் அந்தந்த மாவட்ட அதிகாரிகளுக்கு விவரங்கள் தெரிவிக்கப்பட்டு, பணத்தை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ளவர்களிடம் பணத்தை வசூலிக்கும் பணி நடந்து வருகிறது.

மேலும் கலெக்டர் உத்தரவின்பேரில் பிரதமரின் விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தில் முறைகேடாக பயன்பெற்ற 241 பேரின் வங்கி கணக்குகளும் முடக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.19 லட்சம் பணத்தை திரும்ப பெற வேண்டியது உள்ளது. அதில் கடந்த சில தினங்களில் மட்டும் ரூ.5 லட்சத்தை திரும்ப வசூலித்துள்ளோம். மீதமுள்ள தொகையையும் இன்னும் சில நாட்களில் வசூலித்து விடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top