புனித பிரான்சிஸ் சேவியர் தேவாலயம் கோட்டார்

புனித பிரான்சிஸ் சேவியர் தேவாலயம் கோட்டார்

in News / Local

† இன்றைய புனிதர் †

(டிசம்பர் 3)

✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠

(St. Francis Xavier)

தூர கிழக்கு நாடுகளின் திருத்தூதர்:
(Apostle to the Far East)

பிறப்பு: ஏப்ரல் 7, 1506
ஜேவியர், நவார் அரசு, (தற்போதைய ஸ்பெயின்)
(Javier, Kingdom of Navarre (Present Spain)

இறப்பு: டிசம்பர் 3, 1552 (வயது 46)
'சாவோ ஜோவாஓ' தீவிலுள்ள போர்ச்சுகீசிய தீவு, (தற்போதைய சீனா)
(Portuguese Base at São João Island (now China)

ஏற்கும் சபை/ சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
லூதரனிய திருச்சபை
(Lutheran Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)

அருளாளர் பட்டம்: அக்டோபர் 25, 1619
திருத்தந்தை ஐந்தாம் பவுல்
(Pope Paul V)

புனிதர் பட்டம்: மார்ச் 12, 1622
திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி
(Pope Gregory XV)

நினைவுத் திருவிழா : டிசம்பர் 3

சித்தரிக்கப்படும் வகை:
நண்டு, சிலுவை; லீலி மலர், நெருப்பு, போதகர்,
எரியும் இதயம்

பாதுகாவல்:
இந்தியா; ஆப்ரிக்க மறைப்பணிகள்; அகர்தலா; அகமதாபாத்; அலெக்சாண்டிரியா லூசியானா; ஆஸ்திரேலியா; மும்பை; கோவா (மாநிலம்); கேப் டவுன்; சீனா; டோக்கியோ; பிலிப்பைன்ஸ்; கென்யா; ஸ்பெயின்; நியுசிலாந்து; இந்தோனேசியா; மலாக்கா; மலேசியா; மங்கோலியா.

புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ஸ்பெயின் நாட்டில், கி.பி. 1506ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 7ம் நாளன்று, புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். தமது ஒன்பது வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார். அப்போதே ஸ்பேனிஷ் மற்றும் பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இந்தியாவில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார்.

கல்வி :
கி.பி. 1525ம் வருடம் கல்லூரி படிப்பிற்காகப் பாரிஸ் சென்றார். அதன் பின்னர் 11 வருடங்கள் பாரிசிலே இருந்த புனித சவேரியார், அங்குள்ள புனித பற்பே கல்லூரியில் தத்துவம் மற்றும் கலைத்துறையில் முதுகலை பட்டம் பெற்று, கி.பி. 1530 முதல் 1534 வரை விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

மீண்டும் கி.பி. 1534 முதல் 1536 வரை இறையியலைப் பயின்றார். அப்போது புனித சவேரியாருக்கு புனித இலொயோலா இஞ்ஞாசியார் நண்பரானார்.

"உலகையே ஆதாயமாக்கினாலும் மனிதர் தம் ஆன்மாவை இழப்பாராகில் அதனால் அவருக்கு வரும் பயன் என்ன" என்ற இறைமகன் இயேசுவின் வார்த்தையை இஞ்ஞாசியார், சவேரியாருக்கு எடுத்துரைக்க, சவேரியார் அவ்வார்த்தையின் ஆழத்தை உணர்ந்து இறைவனோடு அதிகமாய் இணைந்திருந்தார். பின்னர் இவர்கள் இயேசு சபையைத் தொடங்கினர். இதில் மீண்டும் நான்கு நண்பர்கள் சேர்ந்து இறைபணியை செய்ய முடிவு செய்தனர்.

குருத்துவமும் இந்திய வருகையும் :
சவேரியாரின் பயணங்கள் :
இதை தொடர்ந்து கி.பி. 1537ம் வருடம், ஜூன் மாதம், 24ம் நாள், குருவாக திருநிலை பெற்று தன் முதல் திருப்பலியை செப்டம்பர் 30ம் நாள் நிறைவேற்றினார். பின்னர் அவரும் அவருடைய நண்பர்களும் திருத்தந்தை மூன்றாம் பவுலைச்சந்தித்து இறைப்பணி செய்வதற்கான தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். அதே வேளையில் போர்த்துகீசிய மன்னன் தனக்குக் கீழ் இருந்த நாடுகளுக்குக் குருக்களைத் தந்துதவும்படி வேண்டியதால், சவேரியார் இந்தியா மற்றும் போர்த்துகீசிய காலனி நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.

புனித சவேரியார் கி.பி. 1540ல் ரோமில் இருந்து புறப்பட்டு லிஸ்பன் சென்றார். அங்கு ஒரு வருடம் இறைபணியை செய்த பின்னர் இந்தியாவிற்கு வரும் வழியில் மொசாம்பிக்கில் ஒரு வருடம் இறைபணியை செய்துவிட்டு கி.பி. 1542 மே மாதம் 6ம் நாள் கோவாவை வந்தடைந்தார். முதல் நான்கு மாதங்கள் கோவாவிலும் பின்னர் தென் இந்தியாவின் குறிப்பாக தமிழகக் கடற்கரைக் கிராமங்களில் தனது இறைப்பணியைச் செய்துவந்தார்.

மறைப்பணி :
கி.பி. 1543ல் தென்திருவிதாங்கூரில் தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தில் தன் இறைப்பணியைத் தொடர்ந்தார். சுமார் பதினைந்து மாதங்கள் கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று அங்கு ஆட்கள் கூடியதும் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்திகளைக் கூறியும் நோயாளிகளைச் சந்தித்தும் வந்தார். திருவிதாங்கூர் இராச்சியத்தில் பல ஆலயங்கள் புனித சவேரியாரால் நிறுவப்பட்டன. மிகக் குறுகிய கால வேளையான ஒரு வருடத்திற்குள் நாற்பத்தி ஐந்து சிறிய கிறிஸ்தவ ஆலயங்களை அவர் நிறுவினார் என்று காண்கிறோம்.

கி.பி. 1544ல் திருவிதாங்கூரை (அன்றைய வேணாடு) திரு. பூதல வீர கேரள வர்மன் என்ற ஜெயசிம்ம நாட்டு மூத்த திருவடிகள் ஆண்டு வந்தார்கள். அவ்வேளையில் விசய நகர மன்னரான விதாலர் ஒரு பெரும் படையுடன் வேணாட்டை முற்றுகையிட்டார். அவரை எதிர்த்து நிற்பதற்கு வேணாட்டு அரசரால் இயலாமல் போகவே அவர் புனித சவேரியாரின் உதவியை நாடினார். விஜய நகரப் படைகள் ஒழுகினசேரி வழியாக வடசேரி மேட்டை நெருங்கிவிட்டது. அவ்வேளையில் குருசையும் செபமாலையும் உயர்த்திப் பிடித்து வடுகர்ப்படைகளை பின்வாங்கும்படி கர்ச்சித்தார்.

புனித சவோரியாரின் இந்த திடீர் செயலானது வடுகப்படையினரை நிலைகுலையைச் செய்துவிட்டது. அவர்களின் முன்பு ஏதோ ஒரு பெரும் பூதம் போருக்குத் தயாராக நிற்பதைப் போன்று அவர்கள் கண்டனர். நடுநடுங்கிய வடுகப்படைகள் எதிர்பாராத விதமாக பின்வாங்கி வேணாட்டைவிட்டு வெளியேறிச் சென்றனர். இவ்விதமாக புனிதர் சவேரியார் பெரும் ஆபத்திலிருந்து அன்று வேணாட்டைக் காத்து நின்றார். இந்நிகழ்ச்சி நடந்த இடத்தில் ஒரு சிறு கத்தோலிக்க ஆலயம் இன்றைய நாகர்கோவில் இராஐம் திருமண மண்டபத்திற்கெதிரில் காணப்படுகிறது.

“அவர்கள் என்னை மகாராஜா என்று அழைத்தார்கள், ஆனால் இனிமேல் அவர்கள் உம்மை எப்போதும் மகாதந்தை என்று அழைப்பார்கள்” (They called me great king, but hereafter for ever they will call you the Great Father) என்று மன்னர் புனிதர் சவேரியாரை நன்றியுணர்வுடன் பாராட்டினார். இன்றைய குமரி மாவட்டத்தின் கோட்டாறு புனித சவேரியார் ஆலயம் இப்புனிதராலேயே நிறுவப்பட்டுள்ளது.

ஒரு முறை கடலில் பயணம் செய்யும் போது புனித சவேரியாரின் சிலுவை தொலைந்து போயிற்று, ஆனால் கரையை அடைந்ததும் ஒரு நண்டு அந்தச் சிலுவையைக் கொண்டுவந்து சேர்த்தது என்பர்.

மரணம்:
புனித சவேரியார் சுமார் 38000 மைல்கள் கடல் மற்றும் தரை மார்க்கமாகப் பயணம் செய்து இறைப்பணியைச் செய்துள்ளார். கடைசியாக சாங்சோங் தீவில் நோயால் பாதிக்கபட்டார். இவரை ஜார்ஜ் அல்வறேஸ் என்னும் போர்த்துக்கீசியர் கவனித்து வந்தார். இருந்தாலும் 1552ம் வருடம், டிசம்பர் மாதம், 3ம் நாள் உயிர் துறந்தார். ஜார்ஜ் அல்வறேஸ் சவேரியாரை அத்தீவிலேயே அடக்கம் செய்துவிட்டுச் சென்று விடுகிறார்.

அழியா உடல்:
சுமார் இரண்டரை மாதங்கள் கழித்து (ஃபெப்ரவரி 17, 1553) அத்தீவின் வழியாக வரும்போது, மீபொருட்களை, அவரின் சொந்த நாட்டுக்கு எடுத்துச்செல்ல கல்லறையை திறந்தபோது அவரது உடல் எந்தப் பாதிப்பும் இல்லாமல் வைத்தது வைக்கப்பட்டது போலவே இருந்தது. நறுமணமும் வீசியது. பின்னர் அவரது உடலை சண்ட க்ரூஸ் என்னும் கப்பலில் மக்காவு கொண்டு சென்றனர். இக்கப்பலானது கி.பி. 1553ம் வருடம், மார்ச் மாதம், 22ம் நாளன்று, மக்காவுவை வந்தடைந்தது. மீண்டும் ஒரு ஆலயத்தில் வைத்து அவரது உடலைப் பார்த்தபோது அது கெட்டுப் போகாமல் நறுமணம் வீசியது என்பர். பின்னர் சவேரியாரின் உடல் புனித சின்னப்பர் தேவாலயத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தந்தை பெய்ரோ புனித சவேரியாரின் உடலைக் கோவா கொண்டுசெல்ல உத்தரவிட்டார். இதன்படி கி.பி. 1553ம் வருடம், டிசம்பர் மாதம், புனித சவேரியாரின் உடல் கோவா வந்தடைந்தது. 450 வருடங்களைத் தாண்டிய பின்னரும் அழியாமல் இன்றும் இப்புனிதரின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

புனித சவேரியார் பேராலயம், கோட்டாறு:
கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறில் சவேரியார் தங்கிருந்தபோது, அன்னை மரியாளுக்கு ஒரு சிறிய ஆலயம் ஒன்றை கட்டினார். அந்த ஆலயம் இருந்த இடத்தில் கி.பி. 1600ல் புனித சவேரியார் பேராலயம் ஒன்று கட்டப்பட்டது. சவேரியார் அன்னை மரியாளுக்கு கட்டிய ஆலயம் பேராலயத்தினுள் இன்றளவும் உள்ளது.✍🏼🌹

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top