7 பேர் வாக்களிக்க தனி வாக்குச்சாவடி

7 பேர் வாக்களிக்க தனி வாக்குச்சாவடி

in News / Local

பத்மநாபபுரத்தில் இருந்து நெல்லை வழியாக மலை கிராமத்துக்கு 160 கி.மீட்டர் தூரம் உதவி கலெக்டர் பயணம் செய்தார். அஙகுள்ள 7 பேர் வாக்களிக்க தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலையொட்டி குமரி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 6 சட்டசபை தொகுதிகளில் பத்மநாபபுரம் சட்டசபை தொகுதி மலை கிராமங்களை உள்ளடக்கியதாக உள்ளது. அதில் ஒரு மலை கிராமமான கோதையாறு மேல் தங்கல் மலை கிராமமும் ஒன்றாகும்.

இந்த கிராமத்தில் ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரியும் 7 வாக்காளர்கள் இந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க உள்ளனர். குமரி மாவட்டத்தில் இருந்து வாக்குச்சாவடி அமைந்துள்ள அமைவிடம் சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவு ஆகும்.

இந்த வாக்குச்சாவடிக்கு குமரி மாவட்டத்தில் இருந்து நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி மணிமுத்தாறு மாஞ்சோலை வழியாகத்தான் செல்ல பாதை வசதி உள்ளது. வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்கள் நடைபெறவுள்ள தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவும், 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவதற்காக வும் பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சிவகுரு பிரபாகரன் நேற்று குமரி மாவட்டத்திலிருந்து இந்த வாக்குச்சாவடி அமைந்துள்ள கோதையாறு மேல் தங்கல் கிராமத்திற்கு பயணம் செய்தார்.

பின்னர் அவர் அந்த வாக்குச்சாவடி ஆய்வு செய்து, அங்கு வாக்காளர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் கூறுகையில், கோதையாறு மேல் தங்கல் கிராமமானது பத்மநாபபுரத்தில் இருந்து 160 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரியும் ஏழு வாக்காளர்கள் அங்கேயே தங்கி இருந்து வருகிறார்கள். அவர்கள் வாக்கு அளிக்கும் வகையில் வாக்கு பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பத்மநாபபுரத்தில் இருந்து நெல்லை மாவட்டம் வழியாக கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, மாஞ்சோலை வழியாக இந்த கிராமத்தை சென்றடைய வேண்டும்.

வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் மண்டல அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரத்துடன் அந்த கிராமத்தை சென்றடைவார்கள். வாக்குப்பதிவு தினமான ஏப்ரல் மாதம் 6-ந் தேதி வாக்குப்பதிவு தொடங்கப்பட்டு வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் வாக்கு எண்ணும் மையமான கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக கொண்டு வரப்படும். கோதையாறு மேல் தங்கல் கிராமத்தில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகளான காற்றோட்ட வசதி, குடிநீர், மின்சாரம் போன்ற வசதிகள் குறித்தும் அலுவலர்களுடன் கண்டறியப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top