அரசு ரப்பர் கழக தோட்டங்களில் களை அழிக்க மருந்து தெளிப்பு: பணியாளர்கள் பற்றாக்குறை

அரசு ரப்பர் கழக தோட்டங்களில் களை அழிக்க மருந்து தெளிப்பு: பணியாளர்கள் பற்றாக்குறை

in News / Local

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ரப்பர் கழகத்தின் கீழ் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. மழைக்காலங்களில் இவற்றில் களைகள் செழித்து வளருகின்றன. இவற்றை அழிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. மலைப் பகுதிகளில் இயந்திரங்களை பயன்படுத்தி களைகளை அழிப்பதும் சிரமமாக இருந்து வருகிறது. பணியாளர்களை நியமித்து களைகளை அகற்ற ஆட்கள் பற்றாக்குறை, கூலியாக பெருமளவு செலவிட வேண்டியது போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகிறது. மேலும் அடிக்கடி மழை பெய்து வருவதால் களைகள் ஒழிக்கப்பட்ட இடங்களில் ஒரு சில நாட்களிலேயே களைகள் மீண்டும் வளர தொடங்கி விடுகிறது. இந்தநிலையில் வனத்துறை சார்பில் களைகொல்லிகளை பயன்படுத்தி களைகளை ஒழிக்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசும் அனுமதி வழங்கியுள்ளது குமரி மாவட்டத்தில் கீரிப்பாறை, காளிகேசம் போன்ற பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்கள், தேக்குமர தோட்டங்களில் ஓங்கி உயர்ந்த காட்டுச்செடிகள், களைகள் நிறைந்த பகுதிகளில் இந்த மருந்து தெளிப்பு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. ‘கிளைபோசேட் 40’ சதவீதம் கொண்ட இந்த மருந்தை 16 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி அளவு சேர்த்து சாதாரணமாக பூச்சி மருந்து தெளிக்கின்ற ஸ்பிரே உதவியுடன் களை செடிகள் வளர்ந்திருக்கின்ற பகுதிகளில் தெளிக்கின்றனர். இதனால் ஓரிரு நாட்களில் செடிகள் கருகி விடுகிறது. மேலும் நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை அந்த பகுதியில் புற்கள் வளருவது இல்லை. இந்த களைக்கொல்லி மருந்துக்கு ஒரு லிட்டருக்கு 400 ரூபாய் செலவாகிறது. இரண்டு, மூன்று பேரை நியமித்து ஏக்கர் கணக்கில் இந்த மருந்துகளை தெளிக்க முடியும். புல் வெட்டும் செலவு மிச்சமாகிறது. தற்போது பரிசோதனை அடிப்படையில் இது செயல்படுத்தப்படுவதாகவும், இதில் நல்ல பலன் கிடைக்கும் தருவாயில் இதனை அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாக அரசு ரப்பர் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top