குமரியில் இதுவரை 74 பேர் வேட்புமனு அளித்தனர்

குமரியில் இதுவரை 74 பேர் வேட்புமனு அளித்தனர்

in News / Local

குமரி மாவட்டத்தில் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. இதுவரை 74 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆகியவை வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. குமரி மாவட்டத்தில் 12-ந் தேதி ஒருவரும், 15-ந் தேதி 2 பேரும், 16-ந் தேதி 4 பேரும், நேற்று முன்தினம் 17 பேரும் என மொத்தம் 24 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 50 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதாவது கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆஸ்டின் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் எம்.ஆர்.காந்தி, தி.மு.க. வேட்பாளர் சுரே‌‌ஷ்ராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயராகவன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மரிய ஜேக்கப் ஸ்டேனிராஜா, அகில பாரத இந்து மகாசபா வேட்பாளர் ஸ்ரீதரன், தி.மு.க. மாற்று வேட்பாளர் நீல தமிழரசன் மற்றும் உ‌ஷா, பால சிவநேசன், பிரவின்ராஜ், ரத்தினம் ஆகிய 4 சுயேச்சைகள் என மொத்தம் 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் எம்.ஆர்.காந்தி கூடுதலாக ஒரு வேட்புமனுவையும், சுரே‌‌ஷ்ராஜன் கூடுதலாக 2 வேட்புமனுக்களையும் தாக்கல் செய்தனர். அந்த வகையில் நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் மொத்தம் 13 வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் அகிலபாரத இந்து மகா சபா சார்பில் மாநில இளைஞர் அணி செயலாளர் துரைராஜ் நேற்று சப்-கலெக்டர் சிவகுருபிரபாகரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல் பனங்காட்டு படை வேட்பாளர் குளோரி செல்வி, சுயேச்சை வேட்பாளர்கள் மதன், ஆல்பர்ட், ஜெர்பின் ஆனந்த் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

குளச்சல் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரின்ஸ் உள்பட மொத்தம் 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். பிரின்ஸ் மீது அனுமதியின்றி போராட்டம் நடத்தியது தொடர்பாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் 73 குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  விளவங்கோடு சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி, பா.ஜனதா வேட்பாளர் ஜெயசீலன் உள்பட 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். கிள்ளியூர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜே‌‌ஷ்குமார் உள்பட மொத்தம் 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ராஜே‌‌ஷ்குமார் மீது அனுமதியின்றி போராட்டம் நடத்தியது தொடர்பாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் மொத்தம் 52 வழக்குகள் உள்ளன.

இதுபோன்று கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 2 வேட்புமனுக்களை தாக்கல் செய்தார். இதுபோக மக்கள் நீதி மய்ய வேட்பாளர் சுபா சார்லஸ் மற்றும் தியோடர் சேம், ஹாக்கின்ஸ், ஜாண் விஜயகுமார், சண்முகம் ஆர்மட் போர்ஸ் ஆகிய 4 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதாவது கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் மொத்தம் 8 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் மொத்தம் 50 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை மொத்தம் 74 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

 

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top