பெண் குரலில் பேசி, 1,000 பேரை ஏமாற்றி பணம் பறித்த என்ஜினீயர்: செக்ஸ் ஆசையை தூண்டி வாலிபர்களை வலையில் விழவைத்தார்

பெண் குரலில் பேசி, 1,000 பேரை ஏமாற்றி பணம் பறித்த என்ஜினீயர்: செக்ஸ் ஆசையை தூண்டி வாலிபர்களை வலையில் விழவைத்தார்

in News / Local

சென்னை மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 19-ந்தேதி அன்று மதுரவாயலைச் சேர்ந்த உதயராஜ் என்ற வாலிபர் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியதாவது:-

பிரியா என்ற பெண் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அவர் எனக்கு செக்ஸ் ஆசையை தூண்டும் வகையில் அன்பொழுக பேசினார். அவர் தன்னுடைய புகைப்படம் என்று கூறி, ஆபாசமாக போஸ் கொடுத்த பெண்ணின் புகைப்படத்தை எனக்கு அனுப்பி வைத்தார். அதற்கு ரூ.100 அனுப்ப வேண்டும் என்று தெரிவித்தார். நானும் அனுப்பி வைத்தேன்.

பின்னர் அதே பெண்ணின் ஆபாச வீடியோ படம் ஒன்றை அனுப்பி வைத்து, அதற்கு கூகுள் கணக்கில் ரூ.1,500 அனுப்ப கூறினார். நானும் அனுப்பி வைத்தேன். இந்த நிலையில், என் மீது அந்த பெண், ஆன்லைன் மூலம் போலீசில் புகார் கொடுத்துள்ளதாக எனக்கு தகவல் வந்தது. நான் அந்த பெண்ணின் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிடுவதாக, மிரட்டல் விடுப்பதாக புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

பின்னர் அவர் கொடுத்த புகார் மனுவை வாட்ஸ்அப்பில் எனக்கு அனுப்பி வைத்து மிரட்ட ஆரம்பித்தார். மீண்டும் ரூ.1,500 பணம் அனுப்ப சொன்னார். பணம் அனுப்பாவிட்டால், போலீஸ் நடவடிக்கை தீவிரமாகும் என்றும், பணம் அனுப்பினால் புகாரை வாபஸ் பெற்று விடுவேன் என்றும் அந்த பெண் தொடர்ந்து பயமுறுத்தி வந்தார். அந்த பெண்ணின் செயல்பாடு எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பெண்ணே எனக்கு ஆபாச படத்தையும், வீடியோவையும் அனுப்பி வைத்துவிட்டு, நான் அந்த பெண்ணின் ஆபாச படத்தை எடுத்து மிரட்டுவதுபோல பொய்யான குற்றச்சாட்டை என்மீது கூறியது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. இது ஒரு வகையான மோசடி செயலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். அந்த பெண் யார்? என்று கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த புகார் மனு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க இணை கமிஷனர் சுதாகர் உத்தரவிட்டார். மயிலாப்பூர் துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

உதயராஜ் மீது பொய்யான புகார் கொடுத்து மிரட்டல் விடுத்தது, பெண் குரலில் பேசியது, ஒரு ஆண் என்று தெரிய வந்தது. அந்த ஆண் நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள பணகுடி, முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர். அவரது தந்தை பெயர் செல்வம். ஓட்டல் தொழிலாளி.

அந்த மோசடி மிரட்டல் நபரின் பெயர் வளவன் ராஜ்குமார் ரீகன் (வயது 27) என்பதாகும். என்ஜினீயரிங் பட்டதாரியான அவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் கம்பெனியில் 1 வருடம் வேலை செய்துள்ளார். பின்னர் வேலையை விட்டுவிட்டு மோசடி வேலையில் இறங்கி விட்டார். அப்பாவி வாலிபர்களுக்கு செக்ஸ் ஆசை காட்டி, யாராவது பெண்களின் ஆபாச படங்களை அனுப்பி வைத்து, பின்னர் ஆபாச படங்களை வைத்து போலீசில் ஆன்லைன் மூலம் புகார் கொடுத்து மிரட்டி நூதனமான முறையில் பணம் பறித்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக அவர் இந்த மோசடி லீலையில் ஈடுபட்டு வந்துள்ளார். தினமும் இதுபோல் அப்பாவி வாலிபர்களை தனது ஆபாச படமோசடியில் விழவைத்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதித்துள்ளது, விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த என்ஜினீயரின் நூதன மோசடி வலையில் 1,000 பேர் வரை சிக்கி பணத்தை இழந்துள்ளனர். ஆனால் இதுகுறித்து யாரும் முதலில் புகார் கொடுக்கவில்லை. உதயராஜ் தான் துணிச்சலாக புகார் கொடுத்தார்.

மோசடி என்ஜினீயர் வளவன் ராஜ்குமார் ரீகன் நேற்று முன்தினம் அவரது சொந்த ஊரில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர் மீது 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மோசடி என்ஜினீயர் ரீகனுக்கு இயற்கையிலேயே பெண் குரலில் பேசும் வல்லமை இருந்தது. இந்த குரல் வளத்தை தனது மோசடி லீலைகளுக்கு தவறாக பயன்படுத்திக்கொண்டார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top