பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. அறிவிப்பு

பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. அறிவிப்பு

in News / Local

பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தாமதம் குறித்து நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் கூறியதாவது:-

நாகர்கோவில் நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணி கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணி 2 ஆண்டுகளில் முடிக்கப்பட வேண்டும். ஆனால் 7 ஆண்டுகள் முடிந்து 8-வது ஆண்டு தொடங்க உள்ள நிலையில் இன்னும் பணிகள் முடிக்கப்படாமல் இருப்பது அரசின் நிர்வாகத் திறன் இன்மையை காட்டுகிறது.

இந்த பணிகளால் நகரச் சாலைகள், நெடுஞ்சாலைகள், தெருக்களில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் மற்றும் குழிகளால் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்புகளும், கை, கால்கள் முறிவு ஏற்பட்டு பலர் ஊனமடைந்தும் உள்ளனர். எனவே பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கும், அவதிக்கும் ஆளாகி வருகிறார்கள். முதியோர் படும்பாடு சொல்லிமாளாது. இதைக் கண்டித்து தி.மு.க. சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. என்ற முறையில் மனுக்களும் கொடுத்துள்ளேன். ஆனால் அதிகாரிகள் இதை கண்டுகொள்வதில்லை.

முன்பு இருந்த மாநகராட்சி ஆணையரும், மாவட்ட கலெக்டரும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் இணைந்து அடிக்கடி இது தொடர்பாக ஆய்வு கூட்டங்கள் நடத்தி பணிகளை வேகப்படுத்தி இருந்தால் இந்த அளவுக்கு காலதாமதம் ஆகியிருக்காது. அதிகாரிகள் சரியாக திட்டமிட்டு செயல்படுவது இல்லை. அந்த திட்டமிடல் சரி இல்லாததால்தான் பாதாள சாக்கடை பணிகள் 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிவடையவில்லை.

எனவே அதிகாரிகள் இதற்கு முழுக்க, முழுக்க காரணம். இனி மேலும் காலம் தாழ்த்தாமல் பணியை விரைந்து முடிக்க புதிய மாநகராட்சி ஆணையரும், கலெக்டரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தி.மு.க. சார்பில் மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். எங்களை போராட்டத்துக்கு தூண்டக்கூடாது என்று மாநகராட்சி நிர்வாகத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் கேட்டுக்கொள்கிறேன்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top