கன்னியாகுமரி மாவட்டத்தின் உணவுக் கலாச்சாரம் மிகவும் நுட்பமானது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் உணவுக் கலாச்சாரம் மிகவும் நுட்பமானது.

in News / Local

கன்னியாகுமரி மாவட்டத்தின் உணவுக் கலாச்சாரம் மிகவும் நுட்பமானது. அதிலும் இங்கே நாஞ்சில் நாட்டு கல்யாணச் சாப்பாடு மிக, மிக விசேசமானது. இதை ஒருமுறை ருசித்துவிட்டால் அதன் ருசியில் புதிதாகச் சாப்பிடுபவர்கள் மயங்கிப் போவார்கள்.
நாஞ்சில் என்றால் நெல் விளையும் மண். செழிப்பான நீர் வளமும், அள்ளித்தரும் விவசாயத்தையும் கொண்ட மண். இங்கே விளைய வைக்கப்படும் நெல் தான் கேரள மக்களின் பசியைப் போக்கிவந்தது. அப்படி நெல் விளைந்த பகுதிகள் தான் நாஞ்சில் நாடு. இந்த நாஞ்சில் நாட்டுப் பகுதியின் உணவுமுறை ரொம்பவே பிரபலம். அதில் நாவூற வைப்பது கல்யாணச் சாப்பாடு!
நாஞ்சில் நாட்டுக் கல்யாணச் சாப்பாட்டுக்கு தலைவாழை இலையில் இருந்து தொடங்கி விடுகின்றது உபசரணை. முதலில் இடது ஓரத்தில் உப்பு வைத்துவிட்டு நகர, அதன் பின்னால் வாழைக்காய் துவட்டல், மாங்காய் பச்சடி, இஞ்சி பச்சடி, தயிர் பச்சடி, அவியல், சேனை எரிசேரி, நார்த்தங்காய் பச்சடி, மசாலாக் கறி என ஒன்பது கறி, 11 கறி என நீளும் பட்டியல். இது போதாதாது என சிப்ஸ், வாழைப்பழம் என நீளும்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவியல் இருந்தாலுன், நாஞ்சில் நாட்டின் அவியல் பிரத்யேகமானது. விசேசமானது. இந்த அவியலில் முருங்கைக்காய், வாழைக்காய், வழுதலங்காய், தேங்காய், கேரட் என பல வித காய்கறிகளும் போடுவார்கள். தமிழகத்தின் மற்ற எந்தப் பகுதியையும் விட குமரி மாவட்டத்தில் மட்டும் அவியல் மலக்கறி எனத் தனியாகக் கிடைக்கும்.
25 ரூபாய், 30 ரூபாய் என வாங்கலாம். இதில் அவியலுக்குத் தேவையான காய்கறிகள் அனைத்தும் சிறு,சிறு துண்டுகளாகக் கொடுப்பார்கள். இதன் மூலம் தனித்தனியாக ஒவ்வொன்றையும் வாங்கும் செலவு மட்டுப்படும். அதேபோல் தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில் மட்டும் தான் சாம்பார் மலக்கறி எனவும் தனியாகக் கிடைக்கும். நாஞ்சில் நாட்டுக் கல்யாண வீட்டின் ஸ்பெசலே இந்த அவியல் தான். கல்யாண வீட்டில் வைக்கப்படும் அவியலுக்கு மிகவும் ருசி அதிகம்..
இப்படி உணவுக் கலாச்சாரத்திலேயே ஏகபட்ட நுட்பங்களைக் கொண்ட நாஞ்சில் நாட்டு சாப்பாட்டை சமைக்கவே தாழக்குடி, பூதப்பாண்டி, சந்தையடி பகுதிகளில் பிரத்யேகமாக சமையல் கலைஞர்களும் இருக்கின்றார்கள். நாஞ்சில் நாட்டுக்காரர்கள் எந்த ஊரில் இருந்தாலும் நாஞ்சில் கல்யாணச் சாப்பாடு என்றால் இப்போதும் நாவூறும்!

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top