தூத்தூர் பகுதியில் தொற்று எண்ணிக்கை 75 ஆக உயர்வு

தூத்தூர் பகுதியில் தொற்று எண்ணிக்கை 75 ஆக உயர்வு

in News / Local

தூத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்த போது அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. அடுத்தடுத்து நடந்த பரிசோதனையில் பங்குதந்தை உள்பட பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் அனைவரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சுகாதாரதுறை அதிகாரிகள் தூத்தூர் பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து சாலைகளை தடுப்புகளால் மூடினர். வீடு, வீடாக சென்று சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 108 பேரிடமும், நேற்று 77 பேரிடமும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அடுத்தடுத்து நடந்த சோதனைகளில் தொற்று எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றது.

நேற்று மாலை நிலவரப்படி தூத்தூர் மண்டலத்தில் தூத்தூரில் 68 பேர், மஞ்சத்தோப்பில் 5 பேர், சின்னத்துறை, வெங்கஞ்சியில் தலா ஒருவர் என மொத்தம் 75 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், கடற்கரை கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுகாதார துறையினர் முகாமிட்டு தினமும் கிருமி நாசினி தெளிப்பு, பிளச்சிங் பவுடர் தூவுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்காக தூத்தூரில் புனித தோமையார் ஆலயம் முன்பும், ஆரம்ப சுகாதார நிலையம் முன்பும் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி, காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களை தன்னார்வ தொண்டர்கள் வீடு வீடாக சென்று வினியோகம் செய்து வருகிறார்கள்.

தூத்தூர் கிராமத்தில் தொற்று அதிகரித்து வருவதால் அதன் சுற்றுவட்டார கிராமங்களான சின்னத்துறை, பூத்துறை, இரவிபுத்தன்துறை பகுதிகளை சேர்ந்த மக்கள் சுய ஊடரங்கு கடைபிடித்து வீடுகளில் முடங்கி உள்ளனர். அந்த பகுதிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தூத்தூர் மண்டலத்துக்கு உள்பட்ட இரயுமன்துறை, பூத்துறை, சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை உள்பட 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், நூற்றுக்கணக்கான நாட்டுப் படகுகள் பூத்துறை, இரயுமன்துறை பகுதியில் உள்ள ஏ.வி.எம். கால்வாய் மற்றும் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இரயுமன்துறை பொழிமுகம் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top