நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். அதிவேக 4ஜி சேவையை விஜயகுமார் எம்.பி.  தொடக்கி வைத்தார்!

நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். அதிவேக 4ஜி சேவையை விஜயகுமார் எம்.பி. தொடக்கி வைத்தார்!

in News / Local

நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். அதிவேக 4ஜி சேவை தொடக்க விழா வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிலையத்தில் நேற்று நடந்தது. இதை, விஜயகுமார் எம்.பி. கலந்து கொண்டு அதிவேக 4ஜி சேவையை தொடங்கி வைத்து பேசினார்.

அதைதொடர்ந்து பி.எஸ்.என்.எல். முதன்மை பொதுமேலாளர் சசிகுமார் பேசும் போது கூறியதாவது:-

நாகர்கோவிலில் 51 கோபுரங்கள் மூலம் செல்போன் சேவை வழங்கப்பட்டு வருகிறது. அவை அதிநவீன 4 எல்.டி.இ. தொழில் நுட்பத்திற்கு மேம்படுத்தப்பட்டு உள்ளன. குமரி மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் 127 செல்போன் கோபுரங்களை 4ஜி தொழில் நுட்பத்திற்கு மேம்படுத்தும் பணிகள் ஏற்கனவே முடிந்து விட்டன. இந்த பகுதிகளிலும் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை வெகு விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

நாகர்கோவில் நகர வாடிக்கையாளர்கள் தங்களது 4ஜி-பி1 ஸ்மார்ட் போன்களில் பி.எஸ்.என்.எல். 4ஜி சிம்களை பயன்படுத்தி அதிவேக டேட்டா சேவைகளை பெற முடியும். ஏற்கனவே 3ஜி சிம் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் 4ஜி சேவை தொடங்கியவுடன் டேட்டா சேவைகளை பெற வேண்டுமெனில் தற்போதைய 3ஜி சிம்கார்டை உடனடியாக 4ஜி-க்கு மாற்றுவது கட்டாயமாகும்.

ஏற்கனவே தங்கள் ஸ்மார்ட் போன்களில் 3ஜி சிம்கார்டுகள் மூலம் இன்டர்நெட் சேவை பெறும் வாடிக்கையாளர்கள் அதனை 4ஜி சிம்கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். அதற்கான இலவச சிறப்பு மேளா மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இலவச மேளா கோர்ட்டு ரோட்டில் உள்ள பொதுமேலாளர் அலுவலகம், கே.பி. ரோடு மத்தியாஸ் வார்டில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் வடசேரி, பார்வதிபுரம், ராமன்புதூர், கோட்டார் ஆகிய இடங்களில் உள்ள தொலைபேசி நிலையங்களிலும் நடக்கிறது.


பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் தங்கள் 4ஜி-பி1 வசதியுள்ள ஸ்மார்ட் போன்களில் ஒரே நேரத்தில் டேட்டா மற்றும் வாய்ஸ் சேவைகளை பெற எல்.டி.இ. ஆட்டோ மோடை தேர்ந்தெடுக்க வேண்டும். பி.எஸ்.என்.எல். மொபைல் வாடிக்கையாளர்கள் தங்களது பழைய சிம்கார்டை 4ஜி-க்கு மாற்றுவது தொடர்பான எந்தவொரு விசாரணைக்கும், உதவிக்கும் எந்த நேரத்திலும் 04652- 279077 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கூறினார் .

விழாவில் பி.எஸ்.என்.எல். துணை பொது மேலாளர்கள் ராஜன், டெல்பின் மேரி, அனிதா, கதிரேசன், அரசு வக்கீல் ஞானசேகர், பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி தலைவர் என்.காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top