நாகர்கோவிலில், கடனை திருப்பிக் கேட்ட போது ஏற்பட்ட தகராறில் விபரீதம் - 2 பெண்கள் தீக்குளித்து தற்கொலை!

நாகர்கோவிலில், கடனை திருப்பிக் கேட்ட போது ஏற்பட்ட தகராறில் விபரீதம் - 2 பெண்கள் தீக்குளித்து தற்கொலை!

in News / Local

நாகர்கோவில் சரலூரை சேர்ந்தவர் சங்கரகுமார், ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி அம்பிகா (வயது 55), மகளிர் சுயஉதவிக்குழு தலைவியாக இருந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அம்பிகா நடத்தி வந்த சுய உதவிக்குழுவில் ஏராளமான பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் ராமன்புதூரை சேர்ந்த தங்கம் (54) என்பவரும் உறுப்பினராக இருந்தார்.

இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுயஉதவிக்குழு மூலமாக ரூ.4 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். எனினும் அம்பிகா விடாமல் தொடர்ந்து கடனை திருப்பிக் கேட்டு வந்துள்ளார். இதன் காரணமாக இவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் தங்கம் தான் வாங்கிய கடன் ரூ.4 லட்சத்தை 3-ந் தேதி (அதாவது நேற்று) அன்று தனது வீட்டில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு அம்பிகாவிடம் கூறியுள்ளார். அதன்பேரில் அம்பிகா, சுயஉதவிக்குழு உறுப்பினர் உஷா என்பவரை அழைத்துக் கொண்டு நேற்று மதியம் தங்கத்தின் வீட்டுக்கு சென்றார். ஆனால் அம்பிகா எதிர்பார்த்தது போல கடனை திரும்ப கொடுக்காமல்,. தன்னிடம் தற்போது கொடுப்பதற்கு பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் அம்பிகாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இப்படியே எத்தனை நாட்கள் ஏமாற்றுவாய்... என்று கூறியபடி தங்கத்தை, அவர் திட்டியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த தங்கம் வீட்டுக்குள் ஓடி சமையல் அறையில் இருந்த மண்எண்ணெய் கேனை தூக்கி வந்து அம்பிகா மற்றும் உஷாவின் கண் எதிரே தன் உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். உடலில் இருந்து மண்எண்ணெய் வடிந்தோடியபடி நின்ற தங்கத்தை பார்த்து அம்பிகா அதிர்ச்சி அடைந்தார். உடனே தங்கம் கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை அம்பிகா பிடுங்கி, அதில் இருந்த மீதி மண்எண்ணெயை அம்பிகா தன் உடலில் ஊற்றிக்கொண்டு “உனக்கு கடன் கொடுத்த பாவத்துக்கு நான் தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்“ என்று கூறியபடியே மண்எண்ணெயை அவர் தன்மீது ஊற்றியதாக தெரிகிறது. இதை பார்த்துக்கொண்டிருந்த உஷா பதறி போனார்.

இருவர் மீதும் தண்ணீர் ஊற்றலாம் என நினைத்து தண்ணீர் பிடிப்பதற்காக வீட்டின் பின்பக்கம் உஷா சென்றுள்ளார். அந்த சமயத்தில் வீட்டில் கொடூர சம்பவம் நிகழ்ந்து விட்டது. அதாவது உடலில் மண்எண்ணெய் சொட்ட சொட்ட நின்ற தங்கம் தன் உடலில் திடீரென தீயை பற்ற வைத்தார், அப்போது அம்பிகாவின் உடலிலும் மண்எண்ணெய் ஊற்றி இருந்ததால் தீ அவர் மீதும் பற்றியது. 2 பெண்களின் உடல்கள் மீதும் தீ பற்றி எரிந்தது. தீயின் கோரப்பிடியில் சிக்கி இருவரும் அலறினர். அவர்களின் அபயக்குரலால் வீடே அதிர்ந்தது. சத்தம் கேட்டு உஷா ஓடி வந்தார். தீயை அணைக்க முற்பட்டார். ஆனால் முடியவில்லை.

இதனால் தீயில் கருகி அம்பிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தங்கத்தின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதில் படுகாயமடைந்த தங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இரவு பரிதாபமாக இறந்தார்.

இதனையடுத்து நேசமணிநகர் போலீசார் அம்பிகா, தங்கம் ஆகிய 2 பேருடைய உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி பிணவறைக்கு கொண்டு சென்றனர். 2 பெண்களின் உடல்கள் மீது தீ பற்றி எரிந்த போது அணைக்க முயன்ற உஷாவுக்கு கையில் தீக்காயம் ஏற்பட்டது. எனவே அவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

கொடுத்த கடனை திருப்பி கேட்ட போது ஏற்பட்ட தகராறில், தீக்குளித்ததில் 2 பெண்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top