குமரி கடற்கரை கிராமங்களில் உலக மீனவர் தினம் கொண்டாட்டம்!

குமரி கடற்கரை கிராமங்களில் உலக மீனவர் தினம் கொண்டாட்டம்!

in News / Local

குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் உலக மீனவர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் உள்ள ஆலயங்களில் சிறப்பு திருப்பலி, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடந்தன.

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் உலக மீனவர் தினத்தையொட்டி கோட்டார் மறைமாவட்ட முப்பணிகள் குழு தலைவர் எட்வின் வின்சென்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. விழாவில் கேக் வெட்டி பிரார்த்தனை செய்யப்பட்டது.

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் உலக மீனவர் தினத்தையொட்டி பங்கு பேரவை சார்பில் சிறப்பு திருப்பலி நடந்தது. நிகழ்ச்சிக்கு பங்குதந்தை ஜோசப்ரொமால்டு தலைமை தாங்கினார். இணை பங்கு தந்தையர்கள் சகாயஆன்டணி, சகாயவில்சன், அன்பின்தேவசகாயம், பங்கு பேரவை துணை தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்லவராயர், துணை செயலாளர் தினகரன், பொருளாளர் பெனி மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள், பங்கு மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று மீனவர்கள் கடற்கரையை அடைந்தனர். அங்கு ஏராளமான ஆண்களும், பெண்களும் கடல் நீரில் இறங்கி மலர்களை தூவி கடல் மாதாவுக்கு மரியாதை செலுத்தினர்.

உலக மீனவர் தினத்தையொட்டி கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் சிறப்பு தூய்மை பணி முகாம் நடந்தது. இந்த முகாமை கன்னியாகுமரி, சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள், கடலோர பாதுகாப்புக் குழும போலீசார் ஆகியோர் இணைந்து நடத்தினர். முகாமை சின்னமுட்டம் மீன்துறை உதவி இயக்குனர் ராஜதுரை தொடங்கி வைத்தார்.

முகாமின் போது சின்னமுட்டம் துறைமுக வளாகத்தில் வளர்ந்து கிடந்து செடி, கொடிகள் மற்றும் புதர்களை வெட்டி அகற்றினர். மேலும் குப்பைக்கூளங்களை சேகரித்து வெளியேற்றினர்.

நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, சின்னமுட்டம் விசைப்படகு மீனவர் சங்க செயலாளர் ரெஜீஸ், கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், சுடலைமணி, நீலமணி, சின்னமுட்டம் நாட்டுப்படகு மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் ஜேசுஅந்தோணி, விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் அசோக், ராயப்பன், வினோத், அஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புத்தளம் அருகே மணக்குடி புனித அந்திரேயார் ஆலயத்தில் உலக மீனவர் தினத்தையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது. பங்கு தந்தை யூஜின், துணை பங்குதந்தை ஜாண் கிங்ஸ்லி ஆகியோர் தலைமை தாங்கினர். தொடர்ந்து, படகு, வலை, தூண்டில் போன்ற மீன்பிடி உபகரணங்கள் மீது பன்னீர் தெளித்து பிரார்த்தனை செய்யப்பட்டது. மேலும், ஆண்களுக்கான நீச்சல் போட்டி, கட்டு மர போட்டி, பெண்களுக்கான வடம் இழுத்தல், மினி மாரத்தான் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகிற 30-ந் தேதி பரிசு வழங்கப்படுகிறது. விழாவில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top