96 – திரை விமர்சனம்

96 – திரை விமர்சனம்

in Entertainment / Movies

கே.ராமச்சந்திரன் என்னும் ராம் ஒரு புகைப்படக் கலைஞர். அவர் பல்வேறு இடங்களில் தன்னுடைய மாணவர்களோடு சுற்றித்திரிந்து புகைப்படங்களை எடுக்கிறார். அப்படி ஒருநாள் தஞ்சாவூர் வரும் போது, 1996 – ஆம் ஆண்டு தான் படித்த பள்ளியான ஆல் செயின்ட்ஸ் பள்ளியின் முன்பு வந்தமர்ந்து தன்னுடைய பள்ளியைச் சுற்றிப் பார்க்கிறார். மலரும் நினைவுகள் வரவே, தன்னுடைய முன்னாள் பள்ளி மாணவர்கள் அனைவரையும் வாட்ஸ் ஆப்பில் ஒருங்கிணைத்து, ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்கிறார்.

அந்த சந்திப்பின் போது ராம் தன்னோடு கூட படித்த ஜானகி தேவி என்னும் ஜானுவைச் சந்திக்க நேர்கிறது. இந்த கூட்டத்திற்காக சிங்கப்பூரிலிருந்து கிளம்பி வரும் ஜானு சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு பிரிந்து போன ராமைச் சந்திக்கும்போது நிகழும் பரவசமே முழுப்படமாக விரிகிறது.

அழகான ஒரு திரைப்படம். பதின்பருவத்தில் துளிர்க்கும் இனம்புரியாத அன்பை அடிப்படையாகக் கொண்டு அதன் பின்னான வாழ்வை அதன் போக்கில் நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்கள்.

பள்ளிப் பருவத்தில் ஏற்படும் ஒரு அன்பின் நிமித்தமான , காதலோ என்று சந்தேகிக்க வைக்கிற ஒரு எதிர்பாலினக் கவர்ச்சியால் ஈர்க்கப் பட்டு அன்பின் வயமாய் சுற்றித் திரியும் ராமும், ஜானுவும் ஒருவரையொருவர் பிரிய முடியாத நிலையில் இருக்கிறார்கள். பத்தாம் வகுப்பு கோடைவிடுமுறையின் முடிவில் பள்ளிக்கு வரும் ஜானு, ராமைக் காணாமல் திகைக்கிறாள். ராமின் அப்பா கடன்தொல்லையால் சொந்த வீட்டை விற்றுவிட்டு, சென்னைக்கு இடம்பெயர்ந்து விட்டதாக அக்கம் பக்கத்தில் விசாரித்து அறிகிறார்கள். ராமை மறக்க முடியாமல் ஜானுவும், ஜானுவை மறக்க முடியாமல் ராமும் வெவ்வேறு இடங்களில் படித்து வளர்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் ஜானுவுக்கு திருமணம் ஆகி, குழந்தை பெற்றுக் கொண்டு சிங்கப்பூரில் செட்டில் ஆகிறாள். ராம் திருமணம் செய்து கொள்ளாமல் ஜானுவின் நினைவிலேயே தனியே வாழ்ந்து வருகிறான். இந்நிலையில் அந்த Reunion கூட்டம் இரண்டு பேருக்குமே தங்களது கடந்த காலத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள ஒரே ஒரு இரவு கிடைக்கிறது. மறுநாள் காலையில் மீண்டும் சிங்கப்பூர் செல்ல வேண்டிய சூழ்நிலையில் ஜானு. அவளை விமான நிலையத்தில் கொண்டு விமானமேற்றி விட வேண்டிய வேலையாக ராம். எப்படிப் பிரிகிறார்கள் என்பதுதான் மிச்சக்கதை.

ராமும், ஜானுவும் தங்களது கடந்தகாலக் கதையை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள அந்த ஒரு இரவையும், அறிமுக இயக்குனர். சி.பிரேம் குமார், ராம், ஜானு சந்தித்துக் கொள்ளும் அந்த ஒரு இரவை இரண்டரை மணிநேரத்தில் நமக்கு பகிர்ந்து கொள்வதுதான் 96 திரைப்படம்.

கத்தி மீது நடப்பது போன்ற கதைக்களம். கொஞ்சம் பிசகினாலும் படத்தின் ஓட்டம் மாறி விடும் விபரீதமே அதிகம் என்பதால் கவனமாகக் கையாண்டிருக்கிறார்கள். அத்தனை நேசித்த இருவர், தாங்கள் இருபது வருடங்கள் கழித்து சந்திக்கும் அந்த இரவு எத்தனை நீளமாக இருக்கும் ? அங்கு என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என்று நமது மண்டைக்குள் மணியடித்துக் கொண்டேயிருந்தாலும் கூட ராம் கதாபாத்திரம் கொஞ்சம் கூட எல்லை மீறாமல் ஜானுவின் மீதான தன்னுடைய அதீத அன்பை மட்டும் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும்.

நத்தை போன்ற திரைக்கதை என்றாலும் கூட திரையில் வைத்தகண் வாங்காமல் உட்கார வைத்திருப்பதுதான் இயக்குனரின் கதை சொல்லும் தந்திரம். ஏனென்றால், எல்லா மனிதர்களுடைய வாழ்க்கையிலும் ஒரு ராம், ஒரு ஜானு, சுபா, முரளி, ஒரு பள்ளிக்கூடம், டீச்சர், வாட்ச்மேன், ஒரு நாவல் பழம் விற்கும் பாட்டி என்று நிறைய கதாபாத்திரங்களின் இருப்பு குவிந்து கிடப்பதுதான் இந்த வாழ்வின் தவிர்க்க முடியாத ஆனந்தம். அதையே தனக்கு சாதகமாக்கி இருக்கிறார் இயக்குனர்.

ராமாக விஜய் சேதுபதி வாழ்ந்திருக்கிறார். பார்க்கவே பாவமாக இருக்கிறது. நாற்பது வயதுக்குட்பட்ட கேரக்டருக்காக மனிதர் பூசிய உடம்போடும், நரைத்த தலைமுடி, தாடி, மீசை என்று வருகிறார். தான் படித்த பழைய பள்ளியின் முன்பு போய் ரெண்டடி பின்னால் வந்து பள்ளியின் முகப்பைப் பார்க்கும் ஒரு காட்சியில் நமக்கு அழகான பள்ளி நாட்களை நினைவுக்கு கொண்டு வருகிறார்.

தன்னுடைய வகுப்பில் போய் நின்று கொள்வது, தன்னுடைய பெயரை முன்னாள் மாணவர் போர்டில் பார்த்து, அந்த கே.ராமச்சந்திரன்! அது நான்தான்! என்று சிலாகிப்பது, குடிநீர்க் குழாயில் கைவைத்து, அதில் வாய் வைத்து உறிஞ்சி குடிப்பது, கத்தோலிக்கப் பள்ளிகளில் அதிகமாய் வளர்க்கப்படும் கொத்து மலர்களில் ஒவ்வொன்றாய் உறிஞ்சி தேன் குடிப்பது, கொடி மரத்தைச் சுற்றுவது, பள்ளி மணியை காதின் பக்கத்தில் வைத்து தட்டிப் பார்ப்பது என்று அடுத்தடுத்து வரும் அந்தக் காட்சிகளில், இனிமையான கடந்த காலத்தை ஒவ்வொரு மாணவனுக்கும் கடத்தி, பின்னோக்கி நகர்த்தியிருக்கிறார். ஒவ்வொன்றும் கவிதைகள் போல இருக்கிறது.

த்ரிஷா மீதான தன்னுடைய காதலை ஒவ்வொரு சம்பவங்களாகச் சொல்லிக் கொண்டே இருக்கும் காட்சிகளில் ஒருவித குளிர் தென்றலாய் மாறி மனதுக்குள் ஊடுருவிச் செல்கிறார் விஜய் சேதுபதி.

நண்பர்கள் அனைவரும் சந்தித்துக் கொள்ளும் காட்சி மனதுக்கு இதமாகவும், ஒவ்வொரு பார்வையாளனின் கடந்த காலத்தைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். த்ரிஷாவின் என்ட்ரிக்குப் பின் படத்தின் போக்கு மாறிப்போகிறது.

த்ரிஷா நடிப்பில் அருமையான முதிர்ச்சி. ராம் வந்திருக்கிறான்! என்று பிரியதர்ஷிணி சொன்னதும் சட்டென மாறும் முகபாவம் கிளாசிக் ரியாக்ஷன். நமக்கும் இப்படி ஒரு ஜானு இருந்திருக்கலாம் ! என்று இல்லாதவர்களையும் ஏங்க வைத்திருக்கிறார். ராமின் மாணவிகளிடம் தங்கள் காதல் கதையை மேஜிக்கல் ரியாலிச உத்தியில் சொல்வது அழகு. ராம் தன்னுடைய திருமணத்துக்கு வந்து ஏதோ ஒருமூலையில் நின்றுகொண்டு பார்த்ததை சொல்லும்போது ஜானுவாக த்ரிஷா கொடுக்கும் முகபாவம் அற்புதம். இன்னமும் தன்னையே நினைத்துக் கொண்டு ராம் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறான் என்று அறிந்து தவிப்பது, ராம் தன்னைத் தேடி தனது கல்லூரிக்கு வந்ததையறிந்து, சிறிய ஆள்மாறாட்டத்தால் விஜய் சேதுபதியைத் தவறவிட்ட விஷயம் தெரிந்ததும், குளியறையில் உட்கார்ந்து அழும் காட்சியில் நம்மையும் அழ வைத்திருக்கிறார். த்ரிஷாவும், விஜய் சேதுபதியும் சேர்ந்து அந்த இரவில் நிகழ்த்துகிற ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்களும் ஒவ்வொரு ஹைக்கூவாக காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். படம் நெடுக இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

சிறுவயது ராம், ஜானு கதாபாத்திரத் தேர்வு பிரமாதம். அதிலும் சின்ன வயது சுபாவாக வரும் முகம் அப்படியே பிரியதர்ஷினியை நினைவூட்டுகிறது. மற்ற பாத்திரங்களும் அப்படியே ! சின்ன வயது ஜானுவாக நடித்திருக்கும் இளம்பெண் நல்ல நடிப்பு, ராம் பாத்திரத்தில் வரும் பையனும் சிறப்பு.

விஜய் சேதுபதியையும் த்ரிஷாவையும் தனியே விட்டுவிட்டு தவிக்கும் இடத்தில் பிரியதர்ஷினியும், பகவதி பெருமாளும் அங்கலாய்க்கும் காட்சிகள் ஜாலி.

தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவிலுள்ள கோவிந்த் மேனன் இசையமைத்திருக்கிறார். தானொரு வயலினிஸ்ட் என்பதை ஒவ்வொரு காட்சிகளிலும் பின்னணியில் பின்னியிருக்கிறார். கதையோடு வரும் பின்னணி இசை மயிலிறகு வருடல். பாடல்களும் நன்றாக இருக்கிறது.

என்.ஷண்முக சுந்தரம் ஒளிப்பதிவில் காட்சிகள் உறுத்தாமல் இருக்கிறது. முதல் பாடலில் விஷுவல் விருந்து வைத்திருக்கிறார். எடிட்டருக்கு பெரிய அளவில் வேலை இல்லை. தேவைக்கு கத்திரி போட்டிருக்கிறார். கதையின் போக்குக்குத் தகுந்த படத் தொகுப்பு.

தமிழ் சினிமாவில் கதைக்குப் பஞ்சம் என்ற அளவில் சிறப்பான திரைக்கதை அமைத்து ஒரு சின்ன விஷயத்தை இரண்டரை மணிநேரப் படமாக எடுத்திருக்கும் சி.பிரேம் குமாருக்கும் அவரது குழுவுக்கும் வாழ்த்துகள். மழை நேரத்து சூடான சுக்கு காபி மாதிரி இதமான படம் 96.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top