ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதில் மும்பை போலீஸ் கமிஷனராக ரஜினி நடித்துள்ளார். டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ரஜினிகாந்தின் அதிரடி சண்டை காட்சிகளும் பஞ்ச் வசனமும் இடம்பெற்று இருந்தன.
தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள டும் டும் பாடல் காட்சியின் வீடியோவை ஏ.ஆர்.முருகதாஸ் தனது வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 45 வினாடிகள் ஒளிபரப்பாகும் இந்த காட்சி திருமண நிகழ்ச்சியில் படமாக்கப்பட்டு உள்ளது. ரஜினிகாந்த் நயன்தாராவை பார்த்து ஸ்டைலாக ஆடிப்பாடுவது போன்று இந்த காட்சி உள்ளது.
பிரமாண்டமான அரங்கில் இதை படமாக்கி இருப்பது தெரிகிறது. அனிருத் இசையில் விவேக் வரிகளில் உருவான இந்த பாடலை நாகேஷ் அஜிஸ் பாடி உள்ளார். பாடல் காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த பாடல் வீடியோவுடன், ஜனவரி 9-ந்தேதி தர்பார் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் தர்பார் சிறப்பு காட்சியை ஒரு நாள் முன்னதாக 8-ந்தேதி திரையிட உள்ளனர். தர்பார் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா வருகிறார். சுனில் ஷெட்டி வில்லனாகவும் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார்,. யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.
0 Comments