சாமி – 2 – திரை விமர்சனம்

சாமி – 2 – திரை விமர்சனம்

in Entertainment / Movies

2003 ஆம் ஆண்டு இயக்குனர். ஹரி இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளிவந்து சக்கைபோடு போட்ட படம் சாமி. அதன் இரண்டாம் பாகமான சாமி 2 ஆம் பாகம், பதினைந்து ஆண்டுகள் கழித்து தற்போது 2018ல் வெளிவந்துள்ளது.

முதல் பாகத்தில் ஆறுச்சாமி ஐ.பி.எஸ் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசியல் பலம்மிக்க கட்டப்பஞ்சாயத்து ரவுடியான பெருமாள் பிச்சையை பகைத்துக் கொண்டு, நகரில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டி, இடையில் ஐயர் பொண்ணான புவனாவைக் காதலித்து டூயட் பாடிக் கொண்டே அவளைத் திருமணம் செய்து கொண்டு , தன் தந்தையைப் பறிகொடுத்து , கோபத்தில் பெருமாள்பிச்சையைப் போட்டு பொளந்து கட்டி, செங்கல் சூளையில் வைத்து அக்கினி பகவானுக்கு உணவாகக் கொடுப்பதோடு முடிந்த கதையைத் தூசி தட்டி இருக்கிறார் இயக்குனர்.ஹரி.ஆறுச்சாமிக்கு பயந்து பெருமாள் பிச்சை ஊரை விட்டு ஓடிப்போனதாக அவரது அடிவருடிகள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். பெருமாள் பிச்சையின் இரண்டாம் சம்சாரத்தின் மூன்று பிள்ளைகளான மகேந்திர பிச்சை, தேவேந்திர பிச்சை , ராவண பிச்சை ஆகிய மூவரும் தங்கள் தந்தையைத் தேடி திருநெல்வேலிக்கு வருகிறார்கள். அப்போது தங்களது தந்தை சாகவில்லை என்பதும், அவரை ஆறுச்சாமி எரித்துக் கொன்றதும் அவர்களுக்குத் தெரிய வருகிறது. இந்தக் கதை தெரிந்த ஆறுச்சாமி திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து மீண்டும் திருநெல்வேலிக்கு வருகிறார். கடைசி மகனான ராவணபிச்சை பழிக்குப் பழியாக ஆறுச்சாமியையும், அவரது நிறைமாத கர்ப்பிணியான மனைவி புவனாவையும் வரும் வழியிலேயே கொன்று விட்டு செல்கின்றனர். புவனாவின் வயிற்றிலுள்ள சிசு உயிரோடிருப்பதையறிந்த ஆறுச்சாமி, தன் மனைவி புவனாவின் வயிற்றைக் கிழித்து குழந்தையைக் காப்பாற்றி விட்டு செத்துப் போகிறார். அந்தக் குழந்தை ராமசாமி இருபத்தியெட்டு வருடங்கள் கழித்து தன் பெற்றோரைக் கொன்ற கயவர்களைப் பழி வாங்குகிறார். இதுதான் சாமி இரண்டாம் பாகத்தின் கதை. டிரெய்லரைப் பார்த்தாடா கலாய்க்கிறீங்க ? இருக்குடா உங்களுக்கு ! என்று பரபர திரைக்கதையில் ஹரி ஓடவிட்டிருக்கிறார். யாரை ஓடவிட்டார் ? என்ற கேள்வி உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் ஹரியின் முந்தைய படங்களைப் பார்த்திருப்பீர்கள் என்று சொல்லும் விடலாம். வேறு யாரை ஓட விடுவார் ? கேமரா மேனையும், ஐநூறு அறுநூறு போலீரோ மற்றும் சுமோ வண்டிகளையும், படத்தின் எடிட்டரையும்தான்.

படத்தின் முதல் காட்சிகளில் முதல் பாகத்தின் கிளிப்பிங்குகளை ஓடவிட்டிருக்கிறார்கள். முதல் பாகத்தில் புவனாவாக வரும் த்ரிஷாவை மறக்கடிக்க இதில் ஐஸ்வர்யா ராஜேஷை கற்பனையாக பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறார் இயக்குனர். ஆனாலும் மொளகாப் பொடி த்ரிஷாவை மறக்கமுடியுமா ? அதில் மனோரமாவும் இருப்பது மனதுக்கு இதமாக இருக்கிறது. பெருமாள் பிச்சை செத்து பதினோரு மாதங்கள் கழித்து, திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு செய்ய வரும் போலீஸ் அதிகாரி ஆறுச்சாமி விக்ரம் அங்கு சாதி மறுப்புத் திருமணத்தை ஆதரித்து ஒரு ஃபைட்டோடு படத்தைத் துவங்கி வைக்கிறார். அதற்கு அடுத்தக் காட்சி இலங்கையில்... கல்லூரியில் தன்னோடு கூடப் படிக்கும் மாணவன் தன் தந்தையைப் பற்றி தவறாகப் பேசவே , அவனைத் துரத்தித் துரத்தி வெளுத்து, அவனது வாயைக் கிழித்து விட்டு , வீட்டுக்குப் போய் தன் தாய் சுதா சந்திரனிடம் போய் நிற்கிறார் ராவணபிச்சையான பாபி சிம்ஹா. அவரைத் திருநெல்வேலிக்கு போய் அப்பாவைத் தேடச் சொல்கிறார் சுதா சந்திரன்.

இலங்கையிலிருந்து தன் அண்ணன்களோடு திருநெல்வேலிக்கு வருகிறார் பாபி சிம்ஹா. வந்தவுடனேயே தன் அப்பாவைக் காட்டிக் கொடுத்த ரெண்டு பேரைப் போட்டுத் தள்ளுகிறார். அதில் ஒருவர் அண்ணன் பயில்வான் ரங்கநாதன். என்ன ஹரி சார் ! படத்தோட ஆடியோ லாஞ்சில அண்ணன் ஏதாவது குதர்க்கமான கேள்வி கேட்டாரா ? வாயி மேலயே கத்திய சொறுகுற சீன் வச்சிட்டீங்க ?பாபி சிம்ஹா தன் அப்பா இறுதியாகப் பயணித்த இடங்களில் ஆய்வு செய்கிறார். தாமிரபரணி ஆற்றுக்குள்ளே எல்லாம் இறங்கி நடக்கிறார்கள். செங்கல் சூளைப் பக்கத்திலுள்ள ஒரு பெண் தன்னுடைய கைக்குழந்தையின் வயதைச் சொல்லவும் உடனடியாகத் துப்பு துலக்குகிறது கண்டுபிடிக்கிறது பாபி சிம்ஹாவின் அசாத்திய மூளை. இந்த உதவி இயக்குனர்கள் எப்படியெல்லாம் லாஜிக் கனெக்டிவிட்டி தேடுகிறார்கள்? புல்லரிக்கிறது...

தன் தந்தை சாகவில்லை! அவர் ஒரு தியாகி! என்று அறிவித்து தங்கள் தந்தைக்கு நடுரோட்டில் சிலை வைக்கிறார்கள். இது கேள்விப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து மாற்றல் வாங்கி திருநெல்வேலிக்கு வரும் ஆறுச்சாமி விக்ரமையும், புவனா ஐஸ்வர்யா ராஜேஷையும் கொல்வதோடு படம் இருபத்தியெட்டு ஆண்டுகள் தாண்டிப் போய் டெல்லியில் நிற்கிறது. அப்புறம் வரும் காட்சிகளெல்லாம் செம்ம த்ரில்.... படம் சுமார் அறுநூறு மைல் வேகத்தில் ஓடத்துவங்குகிறது...அங்கு இன்னொரு பளபள விக்ரம். மேக்கப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள். பின்னே எப்படி ஐம்பத்தி இரண்டு வயது ஆசாமியை இருபத்தி எட்டு வயது வாலிபனாகக் காட்ட முடியும் ? கண்களும் கன்னமும் வயதைக் காட்டினாலும்கூட மனிதரின் உடல்வாகு இருபத்தியெட்டு என்று சொல்ல வைக்கிறது. ஐ.ஏ.எஸ் எழுதி விட்டு மத்திய அமைச்சர் இளைய திலகம் பிரபுவின் ஜந்தர் மந்தர் இல்லத்தில் ஃபிரண்ட் ஆஃபீஸ் மேனேஜராக இருக்கிறார்.

படம் முழுவதிலும், கதாநாயகி முதற்கொண்டு காமெடியன், வில்லன்கள் , கேமராமேன் என்று விக்ரமிடம் அடிவாங்காத ஒரே ஆள் இயக்குனர் மட்டும்தான். பாபி சிம்ஹா ரஜினியை இமிடேட் செய்வதாக நினைத்துக் கொண்டு வாயைக் கோணியபடியே மலச்சிக்கல் வந்தவர் போல திரிகிறார். கீர்த்தி சுரேஷ் அழகாக இருக்கிறார். ஹீரோவிடம் அடிவாங்கிய பின்னர் அவர்மீது காதல் வயப்படும் இந்த நூற்றாண்டின் முதலும் கடைசியுமான கதாநாயகி இவராகவே இருப்பதுதான் தமிழ் சினிமாவின் ஆரோக்கியத்துக்கு நன்று. முசோரி ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் முன்னறிவிப்பில்லாமல் தனியார் ஹெலிகாப்டர் இறங்குவதெல்லாம் கொஞ்சம் ஓவர் திங்கிங்...

அந்நியனில் கொஞ்சம், சிங்கம் கொஞ்சம், தீரன் அத்தியாயம் ஒன்றில் கொஞ்சம் என்று கொத்து பரோட்டா போட்டிருக்கிறார்கள். போலீஸ் பாட்ஜ் நெஞ்சில் பட்டவுடன் உடம்புக்குள் ஒரு தீய சக்தி புகுந்து, அது வரைக்கும் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த ஐயர்.ராமசாமி எதிரிகளைத் தூக்கி தூக்கி வீசுகிறார். சிங்கம் இரண்டாம் பாகத்தில் பயன் படுத்திய அதே தீ எஃபெக்ட் என்று பாடாய்ப் படுத்துகிறார்கள். படத்தில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் நடித்திருக்கிறார்கள் என்று பிரமிக்க வைக்கும் அளவுக்கு ஒவ்வொரு ஃபிரேமிலும் சுமார் இருநூறிலிருந்து நானூறு பேர் வரை நிற்கிறார்கள். பாவம் தயாரிப்பாளர். பெட்ரோல் விற்கும் விலையில் அத்தனை வண்டிகளும் படம் முழுக்க ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் ஓடுகின்றன, பறக்கின்றன, போதாக்குறைக்கு சாதி வெறியர்கள் வேறு வண்டிகளுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைக்கிறார்கள்.

முதல் காட்சியில், உங்களை தாழ்ந்தவர்கள் என்று ஒரு சாரார் அடிமைப் படுத்தி வைத்திருந்ததை மறந்து விட்டீர்களா ? என்று ஒரு குறிப்பிட்ட சாதிமக்களைக் கேள்வி கேட்பது போல வசனம் வைத்திருக்கிறார்கள். பின்பு சூரியின் வாயிலாக ஹீரோவிடம், சாம்பாரும், ரசமும் சாப்புடுற உனக்கே இவ்வளவுன்னா... என்று ஒரு குறிப்பிட்ட சாதியினரைக் கேலி செய்கிறார்கள். பின்பு அதே ஹீரோ பூணூல் அணிந்து சண்டை போட்டுவிட்டு, அவரின் போர்க்குணம் தெரிந்த ஹீரோவின் தாத்தா, உனக்கு இனிமேல் இது தேவைப்படாது! என்று சொல்லி பூணூலைக் கழற்றி வாங்கிக் கொள்கிறார். இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதே புரியவில்லை.

ஹீரோவுக்கு ராம் என்றும், வில்லனுக்கு ராவணன் என்று பெயர் வைப்பதை மணிரத்னம் நிறுத்தி விட்டதை ஹரி மீண்டும் துவங்கி வைத்திருக்கிறார். பரோட்டா சூரி கதாபாத்திரம் கதறல். காசு இல்லாத ஏ.டி.எம் மெஷின் கடகட வென சத்தம் போட்டு விட்டு, இறுதியில் Unable to Process ரசீது தருவதைப் போல இருக்கிறது அவரது மொக்கை காமெடி. பரோட்டா 2003 லிருந்து 2018 ஆம் ஆண்டுவரை கனெக்ஷன் கொடுத்ததில் லாஜிக் முழுவதும் காலமாகி இருக்கிறது. 28 ஆண்டுகள் தள்ளிப் போன கதைப்படி பார்த்தால் இந்தக் கதை 2031 ல் நடப்பதாய் வைத்துக் கொள்ளலாம். ஆனால் 2031லும் என்ன சாதி? என்று கேட்பார்கள், ஹவாலா பணத்தை அரசியல்வாதிகள் கைமாற்றிக் கொண்டே இருப்பார்கள், தமிழர்கள் டெல்லியில் போராட்டம் நடத்துவார்கள், டெல்லிக்காரன் பான்பராக் போட்டு மூஞ்சிலேயே துப்புவான், திருநெல்வேலியில் அரிவாள்கள் நீடித்திருக்கும், தலைவர்களின் சிலை கலாச்சாரம் இருக்கும், சினிமாக்களில் தெருவில் பாடும் டூயட் இருக்கும், மந்திரம் ஓதும் டெக்னிக் இருக்கும், ரவுடிகளுக்கு டாடா சுமோக்களும், போலீசுக்கு பொலீரோவும், புழக்கத்தில் அம்பாசிடர் காரும் இருக்கும் என்று அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளைப் பார்த்தால் இன்னும் பதிமூன்று ஆண்டுகளுக்கு இந்தியா முன்னேற வாய்ப்பேயில்லை என்று நினைக்கும்போது நெஞ்சம் பதறுகிறது. பிரபுவின் டெல்லி இல்லத்தின் போர்டிகோ முன்பிருந்து காட்டப்படும் வைட் ஷாட்களிலெல்லாம் பாலத்தின் மீது புல்லட் ரயில் ஓடிக்கொண்டே இருக்கிறது. இதுதான் வளர்ச்சி என்று இயக்குனர் சொல்கிறாரா ?

கல்யாண் ஜுவல்லர்ஸ் காஸ்டியும் இன்னும் கிழியாத நிலையில் பிரபுவுக்கு காஸ்டியும் செலவு இல்லை. தோளில் ஒட்டிய தலையும், உடம்பில் ஒட்டிய கல்யாண் ஜுவல்லர்ஸ் மோடி கோட்டோடு மனிதர் சைரன் வைத்த வண்டியில் வந்து போகிறார். சிங்கம் படத்தில் நாசர் கையில் பணத்தோடு மகளைக் காப்பாற்ற அலைவார். இதில் பிரபு அலைகிறார். ரயிலில் அடிபட்டு செத்தும் போகிறார் பாவம். ஒரு மத்திய மந்திரியின் மகளைக் கடத்தும் அளவுக்கு திருநெல்வேலியில் ஒரு இலங்கைக்கார வில்லனுக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள். இலங்கையிலிருந்து வந்து ரவுடித்தனம் செய்து, ஹவாலா பணம் ஹேண்டில் செய்து, தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கும் செய்யும் அளவுக்கு வில்லன்களைக் காட்டுகிறார்கள். எப்படி சாத்தியம் ?

ஐஸ்வர்யா ராஜேஷ் சாகும் காட்சியை எச்.ராஜா ட்ரோல் வீடியோ மாதிரி மறுபடி மறுபடி காட்டுவது சலிப்பு.ஒளிப்பதிவாளர். பிரியன் தன்னுடைய கேமராவை கிரேனில் வைத்துக் கொண்டு பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்திருக்கிறார். செம்மையான கோணங்கள்.. பரோட்டா சூரிக்கும் டைனமிக் ஆங்கிள்கள் வைத்து அதகளப் படுத்தியிருக்கிறார்கள். கேமரா மவுண்டுகள் நிறைய பயன் படுத்தியிருக்கிறார்கள். ஹரி படமென்றாலே ஒரு நார்மல் லென்ஸ் , ஒரு அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் ஒரு டிரோன் போதும். படம் முழுக்க ஓட்டி விடலாம்.ஒளிப்பதிவாளருக்கு அடுத்தபடியாக உழைத்திருப்பது ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்தான். மனுஷன் புகுந்து விளையாடியிருக்கிறார், ஓபனிங் சண்டைக்காட்சி, திருவிழா வெடிச்சத்தத்தில் வில்லன் ஜான் விஜயைப் போடுவது, அரசியல் மேடையில் வில்லன் ஓ.ஏ.கே. சுந்தரைப் போடுவது, கோவிலுக்குள் நடக்கும் சண்டைக்காட்சி, கார் துரத்தல்கள், கிளைமாக்ஸ் சண்டை என்று அவர்தான் முழுவதுமாக இருக்கிறார். சபாஷ் !

ஹாரிஸ் ஜெயராஜ் இல்லாத குறை பெரிதாகத் தெரிகிறது. தேவிஸ்ரீபிரசாத் போனால் போகட்டும் என்று இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார். முதல் பாகத்தில் பாடல்கள் மிகப் பெரிய பலம் என்னும் அளவில், இரண்டாம் பாகத்தில் இந்தப் பாடல்களே படத்தின் ஆகப் பெரிய முட்டுக்கட்டை. பின்னணியில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையே ஸ்கோர் செய்கிறது. எடிட்டரின் பங்கு பயங்கரம். இருபத்தைந்து மணிநேர ஃபுட்டேஜை டைம்லைனில் வைத்து ஸ்பீடு டியுரேஷனை ஆயிரக்கணக்கில் ஏற்றி இரண்டரை மணி நேரப் படமாகத் தந்திருக்கிறார். நல்ல வேளை 3D யில் எடுக்கவில்லை. பார்வையாளர்கள் தலை சுத்தி வாந்தி எடுக்க வேண்டியதிருக்கும். அவ்வளவு ஸ்பீடு.... விஷுவல் எஃபெக்ட்ஸ் செலவில் ‘வயர் ரிமூவல்’ மட்டுமே சிலபல லட்சங்களைத் தின்றிருக்குமோ என்னுமளவிற்கு அத்தனை பேரும் அடிவாங்கிக் கொண்டு வானத்தில் பறக்கிறார்கள். இமான் அண்ணாச்சியிடம் அந்தரத்தில் பறந்து கொண்டே அடி வாங்கும் சூரிக்கும் வயர் காட்சிகள் இருக்கிறது.

இயக்குனர் தன்னுடைய முதல் படைப்பான ‘தமிழ்’ படத்தில் உருவாக்கிய டெம்ப்ளேட்டை இன்னும் கைவிடுவதாக இல்லை போலும். 2002 ல் பிரசாந்த், சிம்ரன்,வடிவேலு காம்பினேஷனில் வெளிவந்த ‘தமிழ்’ ஒரு ட்ரெண்டு செட்டர் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதையே 2018லும் ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதில் கொஞ்சமல்ல.. நிறையவே அச்சமிருக்கிறது. லாஜிக் என்றால் என்னவென்றே தெரியாத,சண்டைக்காட்சிகள் மட்டுமே விரும்பிப் பார்க்கும் ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் சாமி 2. படத்தில் மயிலாப்பூர் வாசமும், திருநெல்வேலி வாசமும் வீசுகிறது. ஹரி ஐய்யா ! நீங்கள் ஏன் ஹாரிபாட்டர் ஸ்டைலில் ஒரு படத்தை மயிலாப்பூரில் வைத்து எடுத்து, தலைப்பை ‘ஹரி பட்டர்’ என்று வைக்கக் கூடாது ?

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top