காமெடி நடிகர் யோகி பாபு, திடீரென நேற்று முன்தினம் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த ரகசிய திருமணம் குறித்து யோகி பாபு அளித்த பேட்டியில் கூறியதாவது: எதிர்பாராது சில குடும்ப சூழல் காரணமாக அவசர நிலையில் நான் திருமணம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்.
அதனால் யாருக்கும் முறைப்படி அழைக்கவும் திருமணத்தில் உங்களுடைய வாழ்த்துக்களை பெறவும் முடியவில்லை என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது. அனைவரும் என்னுடைய குடும்ப சூழலை புரிந்து கொள்ள வேண்டும் என்று இங்கு நான் சொல்ல விரும்புகிறேன். எதிர்பாராத சில சந்தர்ப்பங்களில் எதிர்பாராத சில சூழ்நிலைகள் என் திருமணத்தை அவசர நிலையில் நடத்த வேண்டிய நிலையில் நான் இருந்தேன்.
என்ன முடிவு எடுப்பது என்று நான் குழப்பமான நிலையில் இருந்தேன். இரண்டு குடும்பத்தாரிடமும் உட்கார்ந்து பேசி சில முடிவுகள் எடுத்தோம். என் திருமணத்திற்கு முறைப்படி நான் யாரையும் அழைக்கவில்லை என்ற வருத்தங்களும், கோபங்களும் பலருக்கு இருந்து இருக்கலாம்.
ஆனாலும், என்னை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக்கள் மூலமும் அனைத்து சமூகவலைதளங்களிலும் படத்தை வெளியிட்டு வாழ்த்துக்கள் சொன்ன உங்கள் ஒவ்வொருவரையும் கைபிடித்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மார்ச் மாதம் என் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. அனைவரையும் முறைப்படி அழைத்து உங்கள் வாழ்த்துக்களை பெற இருக்கிறேன். விரைவில் நாம் சந்திப்போம் என்றார்.
0 Comments