தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

in News / National

தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியத்தைக் கலைக்கும் எண்ணம் எதுவும் பள்ளிக் கல்வித்துறைக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை, அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைமுறையைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

கொரோனா தொற்றுக் காலத்தில் பள்ளிகளில் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. அதையும் இரண்டு தவணைகளாகப் பிரித்து 30 சதவீதம், 45 சதவீதமாக மட்டுமே பெறவேண்டும் என்று கூறி இருக்கிறோம். அந்த வகையில் மட்டுமே பள்ளிகளில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. 75 சதவீதக் கட்டணத்தையும் மீறி பணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளோம். இது குறித்த அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார். ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. செய்திக் குறிப்பை அனுப்பவில்லை. ஊகங்களின் அடிப்படையில் வெளியான சில செய்திகளை அடிப்படையாக வைத்து சிலர் கருத்துத் தெரிவித்தனர். அனுமானத்தின் அடிப்படையில்தான் இந்த செய்தி வெளியாகி இருக்கக்கூடும். பள்ளிக் கல்வித்துறைக்கு அத்தகைய எண்ணம் எதுவும் இல்லை. எனினும் தேர்வு வாரியத்தை மறு கட்டமைப்பு செய்யும் எண்ணம் உள்ளது.

அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோலத் தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன என்பது குறித்த விவரத்தை விரைவில் தெரிவிக்கிறோம்.

ஏற்கெனவே பள்ளிக் கல்வித்துறையிடம் அனுமதி கோரி அனுப்பப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் நிலுவையில் இருந்தால், அவற்றைப் பரிசோதித்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை என்னால் உணரமுடிகிறது. ஆசிரியர்கள் சிலரே இதுகுறித்து என்னிடம் பேசினார்கள். தனியார் பள்ளியில் இந்த பாடம் எடுத்துக் கொண்டிருந்தேன். இப்போது பெயிண்டிங் வேலை செய்கிறேன் என்று சில ஆசிரியர்களே வீடியோவை எடுத்து அனுப்புகிறார்கள். இதுகுறித்து முதல்வரிடம் எடுத்துச்சென்று, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்''.

மேற்கண்டவாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top