அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம்; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அறிவிப்பு!

அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம்; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அறிவிப்பு!

in News / National

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் பற்றிய பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணியளவில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு இறுதி தீர்ப்பினை வாசித்தது.

இதில், அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு வழங்குகிறோம் என கூறிய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தொடர்ந்து, சன்னி பிரிவுக்கு எதிரான ஷியா வக்பு போர்டு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை , தள்ளுபடி செய்யப்படுவதாக தீர்ப்பில் வாசித்துள்ளார்.

தொடர்ந்து, மதச்சார்பின்மையே அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை. அதன்படியே உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த வழக்கில், பாபர் மசூதி வெற்றிடத்தில் கட்டப்படவில்லை.

பாபர் மசூதிக்கு கீழே கண்டறியப்பட்ட கட்டுமானங்கள் இஸ்லாமியர்களின் கட்டுமானங்கள் அல்ல என தொல்லியல் துறை வழங்கியுள்ள ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அவை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை.

சர்ச்சைக்குரிய இடம் இரு மதத்தினராலும் தங்கள் நம்பிக்கையை வெளிபடுத்தக்கூடிய இடமாக இருந்துள்ளது. அயோத்தி ராமர் பிறந்த இடம் என இந்து மக்கள் நம்புகின்றனர் என்பது மறுக்க இயலாதது. இந்துக்களின் நம்பிக்கையை குலைக்க முடியாது. ஆனால், நிலத்தின் உரிமையை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் கோர முடியாது.

அந்த இடத்தினை பாபர் மசூதி என முஸ்லிம்கள் அழைக்கின்றனர். பாபர் மசூதி இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை. நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எதனையும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் முடிவெடுத்து விட முடியாது. நிர்மோகி அகாரா வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என அதனை தள்ளுபடி செய்துள்ளது.

அமைதியை காக்கவும், பாதுகாப்பினை பராமரிக்கவும் ஏற்ற வகையில் நீதிமன்ற தீர்ப்பினை ஏற்று கொள்ள வேண்டும். நிலம் 3 ஆக பிரித்து கொடுத்தது தவறு. வக்பு போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய அரசு, உத்தர பிரதேச அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரித்து அலகாபாத் நீதிமன்றம் வழங்கியது தவறு. கடந்த 1857ம் ஆண்டுக்கு முன் சர்ச்சைக்குரிய இடத்தில், உரிமைக்கான ஆவணங்களை நிரூபிக்க முஸ்லீம் அமைப்புகள் தவறி விட்டன. அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் அறிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்டுவதற்கு 3 மாதங்களில் மத்திய அரசு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். முஸ்லீம்களுக்கு மசூதி கட்டுவதற்காக தகுந்த இடத்தில் 5 ஏக்கர் மாற்று நிலத்தை வழங்கவும் நீதிபதிகள் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.

இந்த தீர்ப்பினை அடுத்து சன்னி வக்பு வாரிய வழக்கறிஞர் ஜாபர்யாப் ஜிலானி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, நீதிமன்ற தீர்ப்பினை நாங்கள் மதிக்கின்றோம். ஆனால் அதில் எங்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. அடுத்து என்ன செய்வது என்பது பற்றி நாங்கள் முடிவு செய்வோம் என கூறியுள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top