காதலர் தினத்தை முன்னிட்டு பீகார் அரசு புதிய முயற்சி!

காதலர் தினத்தை முன்னிட்டு பீகார் அரசு புதிய முயற்சி!

in News / National

காதலர் தினத்தை கொண்டாடும் விதமாக பீகார் மாநில அரசு ஒரு புதிய யோசனையை கொண்டு வந்துள்ளது. அதாவது காதலர் தினத்தில் காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜாக்களை பறிமாறிக்கொள்வதைவிட மரக் கன்றுகளை பறிமாறிக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்ரவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தன்று பொதுவாக ஆணும் பெண்ணும் ரோஜாக்களை பறிமாறிக்கொள்வார்கள். ஆனால் இதுபோன்ற நாள்களில் இளைஞர்களை ஊக்குவிக்கவும் சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்கவும் ரோஜாக்களுக்கு பதிலாக மரக்கன்று யோசனையை கொண்டு வந்துள்ளது பீகார் மாநில அரசு. இதற்கு "பியார் கா பவுதா" என பெயரிடப்பட்டுள்ளது. அதற்கு மரங்கள் மீதான காதல் என்று அர்த்தம்.

இதுகுறித்து பீகார் மாநில அரசின் முதன்மைச் செயலாளர் தீபக் குமார் சிங் கூறும்போது " இளைஞர்களை மரக் கன்று நடுவதை ஊக்குவிப்பதற்காக அரசே இந்த யோசனையை கொண்டு வந்துள்ளது. காதலர் தினத்தன்று இதுபோன்ற செயல்களை நிச்சயம் இளைஞர்கள் செய்வார்கள் என்று அரசு நம்புகிறது. இதற்காக பாட்னா நகரில் இளைஞர்கள் அதிகமாக கூடும் இடங்களில் இலவசமாக மரக்கன்றுகளை வைக்க ஏற்பாடு செய்துள்ளோம். அத்தகைய இடங்களை ஏற்கெனவே தேர்வு செய்துவிட்டோம்" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர் "மரக் கன்றை நட்டதும் நம்முடைய வேலை முடிந்துவிட்டது என்று இளைஞர்கள் நினைக்கக் கூடாது. அதனை முறையாக பராமரிக்க வேண்டும். பொது இடங்களில் நடப்படும் கன்றுகளை அரசே பராமரிக்கும். இதற்காக காதலர்கள் அதிகம் கூடும் இடங்களில் மரக் கன்றுகள் அதிகம் அரசு சார்பில் வைக்கப்படும்" என்கிறார் தீபக் குமார் சிங்.

கடந்தாண்டு பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமாரை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் சந்தித்தார். அப்போது மரங்கள் நடுவது குறித்தும் இயற்கையை பெருக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து அரசு சார்பில் "ஜல் ஜீவன் ஹரியாலி" என்ற துறை தொடங்கப்பட்டு மரக் கன்றுகளை நட்டு வருகிறது பீகார் அரசு.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top