"இந்த வழக்கினை, மனுதாரர், பொதுநல நோக்கத்துடம் தொடரவில்லை. இந்த வழக்கை தொடர்ந்ததில் உள்நோக்கம் இருப்பதை அறிய முடிகிறது” - டெல்லி உயர் நீதிமன்றம்
தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதி தகரத் தடுப்புகளால் மூடப்பட்டு, “இந்தப் பகுதிக்குள் நுழைவதற்கு அனுமதி இல்லை“, “இங்கு யாரும் புகைப்படமோ, வீடியோவோ எடுக்கக் கூடாது” என்று எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஏனென்றால், அந்தப் பகுதியில் அதி முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதாவது, புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மிகவும் பிரமாண்டமான முறையில், அசத்தலான வடிவமைப்பில் புதிய நாடாளுமன்றமும், புதிய செயலகமும் கட்டப்படுகின்றன.
புதிய நாடாளுமன்றக் கட்டடம் தேவையில்லை என்று பலர் எதிர்ப்பு தெரிவிக்க, மத்திய ஆட்சியாளர்கள் தரப்பிலிருந்து ஒரு விளக்கம் தரப்பட்டது. அதாவது, ``நாடாளுமன்றக் கட்டடம் நவீனமாக்கப்படுகிறது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மிச்சமாகும். புதிய கட்டடங்கள் மிகவும் வலுவானதாகவும், பூகம்பத்தைச் சமாளிக்கும் வகையிலும் இருக்கும். இந்தத் திட்டம் தேசியநலன் கொண்டது” என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றம் உள்ளடங்கிய `சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தை நிறுத்தக் கோரி தாக்கல் செய்த மனு மீது டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. டெல்லியில் கொரோனா வைரஸ் 2-வது அலை உச்சக் கட்டத்தை எட்டியபோது, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் டெல்லியில் அனைத்து கட்டுமானப்பணிகளையும் நிறுத்த உத்தரவிட்டது. எனினும் சென்ட்ரல் விஸ்டா திட்டம் தொடர்ந்து செயபட்டு வந்தது. இதனை தொடர்ந்து, ``சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை நிறுத்தவும் உத்தரவிடக் கோரி” டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசின் வாதமும், மனுதாரரின் வாதமும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று இந்த வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கியது. ``புதிய நாடாளுமன்ற கட்டடம் அடங்கிய சென்ட்ரல் விஸ்டா திட்டம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. அத்தியாவசியமானது. மேலும் கட்டுமான பணியில் இருக்கும் பணியாளர்கள், கட்டட பணி நடக்கும் இடத்திலே தான் தங்கி இருக்கிறார்கள். இதனால் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க முடியது” என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் `இந்த வழக்கினை, மனுதாரர், பொதுநல நோக்கத்துடம் தொடரவில்லை. இந்த வழக்கை தொடர்ந்ததில் உள்நோக்கம் இருப்பதை அறிய முடிகிறது. அதனால், வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது’ என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments